திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கிராம சபை தீர்மானத்தை மீறி மதுக்கடை திறக்க முயன்றால் தீ வைத்து கொளுத்துவோம் என்று பெண்கள் ஆவேசத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் புதியதாக மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக புதியதாக திறக்கப்பட உள்ள மதுக்கடைக்கு முன்பு டாஸ்மாக் பெயர் பலகை செவ்வாயன்று (பிப்.6) மாட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் கடந்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி எல்லைக்குள் எங்குமே புதியதாக மதுக்கடை திறக்க கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது புதிய டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது என்று அந்த கிராம மக்கள் கூறினர்.
குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் மதுக்கடை திறக்கப்படுவதால் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மதுகுடிப்பவர்களால் கேலி,கிண்டலுக்கு ஆளாவார்கள்.இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு கல்வியை கைவிடும் நிலைக்கு மாணவிகள் தள்ளப்படுவதாகவும் பெண்கள் வேதனை தெரிவித்தனர். பள்ளி கல்லூரிகள் அனைத்தையும் மூடி விட்டு டாஸ்மாக் கடைகளாக மாற்றி கொள்ளுங்கள் எனவும் ஆவேசத்துடன் கூறினர்.
டாஸ்மாக் கடையால் இப்பகுதியில் பல பெண்கள் விதவைகளாக மாறியுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் டாஸ்மாக் பெயர் பலகையை அடித்து நொறுக்க முயன்றதால் காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் டாஸ்மாக் கடையின் பெயர் பலகையை பொதுமக்களே கடையில் இருந்து கழற்றி விசிறி எறிந்தனர். கடை திறக்கப்படாது என காவல் துறையினர் உறுதியளித்தையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் பின்னரும் தங்களது கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி அதனை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்துவோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.