கண்டாச்சிபுரம் வட்டம் வசந்தகிருஷ்ணாபுரத்தில் தலித் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வசந்தகிருஷ்ணாபுரத்தில் டிசம்பர் 31 இரவு மர்மமான முறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இஞ்ஜினியரிங் மாணவன் கிருபாநிதி, வீரமணி, பிளஸ்டூ மாணவன் கோபிநாத் ஆகியோர் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் சாலையில் கிடந்தனர். இதில் கிருபாநிதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையிலும், வீரமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் இறந்துவிட கோபிநாத் தற்போது சிகிச்சைபெற்று வருகிறார். மூவருமே சுயநினைவிழந்து கிடந்து கிருபாநிதியும், வீரமணியும் மூளைச்சாவடைந்து மரணம டைந்துவிட கோபிநாத் நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
இக்கொலை சம்பவத்தை விபத்து என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ள நிலையில் இம்மூவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது திட்டமிட்ட படுகொலை என இன்றுவரை கூறுகின்றனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செவ்வாயன்று மாலை (பிப் 6) வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,“இந்த சம்பவம் நிச்சயமாக விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலையாகும். இதில் இக்கிராம முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. மாநில அரசின் துணையோடு இக்கொடூர செயல் விபத்து என காவல்துறையால் திசை திருப்பப்படுகிறது. எனவே உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் தற்போது சிகிச்சையில் உள்ள கோபிநாத்திற்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.
அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், வட்டச் செயலாளர்கள் எம்.முத்துவேல், ஏ.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.