சேலம்: சேலத்தில் தனியார் மருத்துவமனையின் கட்டண கொள்ளையை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை சிறைவைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அராஜக போக்கில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் 5 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த திங்களன்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தடுப்புச்சுவரில் மோதி காயமடைந்தார். கன்னம் மற்றும் தோள்பட்டையில் சிராய்ப்பு ஏற்பட்ட நிலையில், இவர் அங்குள்ள ஸ்ரீகோகுலம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அம்மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கான தொகையை லட்சுமணனின் உறவினர்கள் அவ்வப்போது செலுத்தி வந்தனர். இந்நிலையில், லட்சுமணனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த உறவினர்களிடம், பிரிண்ட் செய்யப்படாத மேலும் 8 ஆயிரம் ரூபாய்க்கான பில் வழங்கப்பட்டது. வெறும் சிராய்ப்புகளுக்கான சிகிச்சைக்கு ஏறத்தாழ 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு செலவாவதை கவனித்த உறவினர்கள், இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு மிரட்டும் தொனியில் மருத்துவமனை நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக லட்சுமணனின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் செய்தியாளர்கள் சென்று, செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவமனை நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்திற்குள் பூட்டி சிறை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பத்திரிக்கையாளர்களை மீட்டனர். இதுபோன்ற அராஜக போக்கில் செயல்பட்ட மருத்துவமனைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: