லக்னோ, பிப்.7-
காஸ்கன்ச் கலவரம் அமைதியை குலைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றுஉண்மை கண்டறியும் குழுகூறியுள்ளது. இதுவரை கலவரம் ஏற்படாத நகரம் என பெயர் எடுத்த காஸ்கன்ச்சில் அமைதியை குலைப்பதற்காக இந்துத்துவா அமைப்புகள் குடியரசு தினத்தன்று மதவெறி வன்முறையை ஏற்படுத்தின.
13 சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுபிப்.2 அன்று காஸ்கன்ச் சென்று வந்தது. ‘வெறுப்புணர்வுக்கு எதிரான குழு’ என பெயரிடப்பட்ட அதன்அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது. அதில், அமைதியை குலைப்பதற்காக திட்டமிடப்பட்ட கலவரம் என குற்றம் சுமத்தியுள்ளது. இதை அடக்குவதன் பெயரில் அங்குள்ள போலீசார் சிறுபான்மை சமூகத்தினரை குறி வைத்திருப்பதாகவும் புகார் கூறியுள்ளது. இது குறித்து உண்மை கண்டறியும் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி கூறும்போது, ‘’இரு பிரிவினர்களிடம் நடத்திய விசாரணையில் சங்கல்ப் அமைப்பு மற்றும் ஏபிவிபியினர் முஸ் லிம்களை குறி வைத்து ஜன.26இல் ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட கலவரத்தில் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் இருமசூதிகள் எரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யாததுடன், முஸ்லிம்களின் பகுதிகளுக்கு மட்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.