ஆங்காங்கே பெட்டிக் கடைகளிலும், பெரு வணிக நிறுவனங்கள், வங்கிகள், செய்தித்தாள்கள், விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், பெரு வணிக நிறுவனங்கள் எனப் பல இடங்களிலும் நம் கண்ணில் படுவது கறுப்பு வெள்ளை நிறத்தில் சதுர வடிவத்தில் தோற்றமளிக்கும் QR கோட்.

இன்று வணிக நோக்கில் மிகச்சிறந்த வசதியாக மாறியிருக்கும் QR குறியீட்டு முறை வந்து 20 வருடங்களுக்கு மேலானாலும் எங்கும் ஸ்மார்ட்போன் என்று மாறியுள்ள இன்றைய சூழல்தான் இதன் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். சிறு விளம்பரங்கள் அளிப்பவர்கள்கூட மேலும் விபரங்களுக்கு எனக் குறிப்பிட்டு ஒரு QR கோட் வெளியிடுவார்கள். நம்முடைய ஃபோனில் உள்ள QR கோட் ரீடர் ஆப் மூலமாக அதனை ஸ்கேன் செய்தால் அந்த விளம்பரதாரரின் இணையப் பக்கத்திற்கு அழைத்துச் சென்று விளம்பரம் குறித்த விபரங்கள் காட்டச் செய்வது தற்போது வழக்கமாகியுள்ளது. இதன் மூலம் விளம்பரத்தில் முழு விபரங்களையும் வெளியிடாமல் இணையதளங்களுக்கு அழைப்பதன் மூலம் வணிகத்திற்கு புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் பெயரை தட்டச்சு செய்து பார்க்கும் சிரமத்தை பயனாளருக்கு குறைப்பதுடன், எளிதாக ஒரு கிளிக்கில் விபரம் அறிந்து கொள்ள வசதியாக இருக்கிறது QR கோட்.

இதுமட்டுமல்லாமல் வெளிப்படையாக தெரிவிக்க இயலாத வங்கிக் கணக்கு விபரங்களை இந்தக் குறியீட்டில் உருவாக்கிக் கொள்வதன் மூலமாக வர்த்தகம் எளிதாகியுள்ளது. பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. வங்கி ஆப்ஸ்கள், இ-வாலட்கள் எனப் பலவும் இந்த வசதியை வழங்குகின்றன.

க்யூஆர் கோட் தொடக்கத்தில்..
விரைவாக அறிந்து கொள்ள உதவும் குறியீடு எனப் பொருள்படும் Quick Response Code -ன் சுருக்க வடிவம்தான் QR Code.இந்த குறியீட்டு முறை உருவானது ஜப்பானில். 1994-ல் டொயோட்டா நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான டென்சோ-வேவ் (Denso-Wave)தான் அறிமுகம் செய்தது. வெள்ளை, கறுப்பு சதுர கட்டங்களைக் கொண்டு குறியீட்டை அமைப்பதுதான் இதன் அடிப்படை. 2D முறையில் ஸ்கேன் செய்து விபரம் அறியலாம்.

டோயோட்டாவில் வாகன உதிரிப்பாகங்கள் கையாளப்படுவதை கண்காணிக்க இக்குறியீட்டு முறை பயன்பட்டது. சிறியதாக ஒரு சதுரத்தில் தொடங்கிய QR கோட், இன்று உலகமெங்கும் பல சேவைகளில் பரந்து விரிந்து பரவியுள்ளது.

வழக்கமாக பொருட்களின் விலையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பார்கோட் முறையைத் தாண்டி இதில் எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் என நம் தேவைக்கேற்ப எந்தத் தகவலையும் உள்ளிட்டு QR கோட் உருவாக்கிக் கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பாகும்.
ஒரு QR குறியீட்டில் கணினி பைனரி கணக்கின்படி 8 பிட்களில் அதிபட்சமாக 2953 பைட் டேட்டாவை பதியலாம். அதாவது எண்கள் மட்டும் என்றால் சுமார் 7,089 எழுத்துகள். அதுவே எண்கள் மற்றும் எழுத்துகள் இரண்டையும் கலந்து அமைப்பதாக இருந்தால் 4,296 எழுத்துகளை உள்ளிட்டு அமைக்கலாம்.

QR கோட் அமைப்பு
எண்ணற்ற கறுப்பு, வெள்ளை சதுரங்கள் கலந்து காணப்படும், இதில் ஒரு ஒழுங்கமைப்பும் பல QR கோட்களை நீங்கள் உற்றுப் பார்த்தால் அதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். QR குறியீட்டில் சுற்றிலும் உள்ள வெள்ளை வெற்றிடம் எளிதாக குறியீட்டை ஸ்கேனர் அறிந்து கொள்ள உதவுகிறது. அடுத்து QR குறியீட்டில் பளிச்சென்று தெரியும் மூன்று சதுரப் புள்ளிகள் குறியீட்டின் திசையினைக் குறிக்கின்றன. திசை எனும்போது நீங்கள் கையில் வைத்துள்ள பொருள் தலைகீழாக, நேராக, பக்கவாட்டில், கிடைமட்டமாக என்று எந்த கோணத்தில் வைத்திருந்தாலும் சரியான நிலையை ஸ்கேனர் உணர்ந்து கொள்ள இது உதவுகிறது. உள்ளிடப்பட்ட தகவலின் டேட்டா அளவிற்கேற்ப அதிகமாகவோ குறைவாகவோ சதுரப்புள்ளிகள் காணப்படும். ஒரு QR குறியீட்டில் ஏதேனும் சிறிது சேதம் அதாவது கீறல் இருந்தாலும் கூட, ஸ்கேனர்களால் தகவலை முழுமையாகப் பெறுவது சாத்தியம்.

QR கோட் நாமே உருவாக்க முடியுமா?
நம்முடைய தேவைக்கேற்ற QR கோட்களை உருவாக்கிக் கொள்ள QR Code Creator மென்பொருள் தாங்கிய சில இலவச இணையதளங்களும், மொபைல் ஆப்ஸ்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.கட்டண அடிப்படையில் உருவாக்கித் தரும் இணையதளங்களும் உள்ளன. உங்கள் தேவையை பொறுத்து தேர்வு செய்யலாம்.

https://www.qrstuff.com/
https://www.the-qrcode-generator.com/
http://goqr.me/

Leave A Reply

%d bloggers like this: