திருப்பூர், பிப். 6 –
விசைத்தறி நெசவுக் கூலி குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சோமனூர், பல்லடம், மங்கலம், அவிநாசி உள்ளிட்ட வட்டாரங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. ஜவுளி வியாபாரிகளிடம் இருந்து விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூல் வாங்கி தொழிலாளர்கள் மூலம் கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர். ஜவுளி வியாபாரிகளிடம் துணி நெசவுக் கூலியை பெற்று அதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மூன்றாண்டு இடைவெளியில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி வியாபாரிகளுக்கும் இடையே கூலி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவது வாடிக்கை.

இதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் அரசு முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் ஜவுளி வியாபாரிகள், சந்தையில் விசைத்தறித் துணிக்கு போதிய விலை கிடைக்கவில்லை, வியாபார நெருக்கடி இருக்கிறது என்று காரணம் சொல்லி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒப்பந்தக் கூலியை தன்னிச்சையாக குறைத்துவிட்டனர். இது விசைத்தறியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த கூலிக் குறைப்பு பற்றி விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர், மாநில அமைச்சர் மற்றும் அரசுத் துறைக்கு முறையிட்டும், பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் இப்பிரச்சனையில் தீர்வு காணப்படவில்லை. இதற்கிடையே 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மோடி அறிவித்த உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் விசைத்தறி தொழில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது. அப்போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்று வரை மீள முடியவில்லை என்று விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபக்கம் ஜவுளி வியாபாரிகள் கூலிக் குறைப்பு மறுபக்கம் செல்லா பண நடவடிக்கைக என இருபுறத் தாக்குதலில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டது.

இதனால் வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் கணிசமான விசைத்தறியாளர்கள் தொழிலை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. சுமார் 10 ஆயிரம் தறிகளை இயக்கக்கூடிய 500 விசைத்தறி உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் செயல்படா சொத்து என அறிவித்து முடக்குவதற்கு வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பலர் நெருக்கடிக்கு இடையிலும், வேறு தொழில் வாய்ப்பு இல்லாத சூழலில் தாக்குப்பிடித்தால் போதும் என்று விசைத்தறிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே விசைத்தறி தொழிலை நெருக்கடியில் இருந்து மீட்க ஜவுளிவியாபாரிகள் தன்னிச்சையாக குறைத்த கூலியை, ஒப்பந்த அடிப்படையில் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ள விசைத்தறியாளர்களை மீட்க சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்தொகையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறைக்கப்பட் கூலியை ஒப்பந்தப்படி உயர்த்தி வழங்குவது தொடர்பாக இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி (வியாழனன்று) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சுமூகதீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, வங்கி கடனைத் தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.