பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒன்பது மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளது. இதில், மேட்டுக்காலனிக்கு விநியோகம் செய்யும் மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து விட்டது. இதனால் தற்காலிகமாக வேம்பேடு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக வேம்பேடு பகுதியில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள பல்வேறு தெரு மின் விளக்குகள் பழுதடைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையில் இரவு நேரத்தில் செல்லும் போது முதியவர்களும், நோயாளிகளும் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிராம மக்கள் செவ்வாயன்று (பிப். 6) காலை திருவள்ளூரில் இருந்து மெய்யூர் வழியாக மேல் செம்பேடு நோக்கிச் சென்ற அரசுபேருந்தை (தடம் எண்:72ஆர்) சிறைபிடித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

மின் மோட்டார் பழுது நீக்கி இன்னும் 2 நாட்களில் குடிநீர் பிரச்சினையை போக்குவதாகவும், மின் விளக்குகளை இன்றே சரி செய்வதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சாலை அமைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்.
இதை ஏற்று கிராமமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் சிறை பிடிக்கப்பட்ட பேருந்து காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

Leave A Reply

%d bloggers like this: