திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெண் தொழிலாளர்கள் சரிபாதி வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பண மதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும், டிராபேக் குறைப்பும் இத்தொழிலில் பல்வேறு வித பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்சமூகரீதியான தாக்குதலில் முதன்மையாக பாதிக்கப்பட்டிருப்போர் பெண்களே என்று சொன்னால் மிகையல்ல.ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் வேலை செய்து குடும்பத்தை நடத்துவதிலும், குடிகார கணவன், கைவிடப்பட்டோர், விதவைகள் என தனித்து வாழும் பெண்கள் என தன்னந்தனியாக குடும்பத்தை நடத்துவதிலும் பெண்களுக்கு மிகப்பெரும் தன்னம்பிக்கை அளிக்கும் ஆதாரமாக பின்னலாடைத் தொழில் இருந்து வருகிறது. தையல், செக்கிங், கைமடி என பல்வேறு பிரிவுகளில் இங்கேகம்பெனிகளிலும், வீடுகளிலும் பெண்கள் வேலை செய்வதைப் பார்க்க முடியும். இங்கு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தின் அன்றாட செலவுகளை ஈடுகட்டுவதுடன், ஏதோ ஒரு வகையில் சிறு சேமிப்பு செய்தும் நீண்ட கால தேவைகளையும் ஈடுசெய்வார்கள். மற்றொருபுறம் அவசரமான பெரிய செலவுகளுக்கு சுயஉதவிக் குழுக்கள், மைக்ரோ பைனான்ஸ் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெறுவது, கந்துவட்டி கடன் என பெறக்கூடிய கடன் தொகைகளையும் அவர்கள் வேலை செய்து பெறும் வருமானத்தில் வட்டியுடன் முறையாக கடனை அடைத்துவிடுவார்கள்.

பணமதிப்பு நீக்கத்தில் பெண்களுக்கு விழுந்த முதல் அடி, குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஏற்கெனவே வாங்கிய மைக்ரோ பைனான்ஸ், கந்துவட்டி, சுய உதவிக் குழு கடன் ஆகியவற்றின் தவணைத் தொகைகளைக் கட்டமுடியாமல் திண்டாடினர். மேலும் பணமாக தந்த சம்பளத்தை வங்கிகள் மூலம் செலுத்தும் சூழல் ஏற்பட்டதால் கையில் அவசரத் தேவைக்குப் பணம் இல்லாமல் போனது. பெரும்பாலான பெண்களின் வங்கி கணக்கு புத்தகங்கள் கணவர்களிடம் இருக்கும் நிலையில் அவர்களை எதிர்பார்த்து இருக்க வேண்டியதுடன், சுயமாக சேமித்த சிறுசேமிப்புக்கான வாய்ப்பும் அடைபட்டது. பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து ஜிஎஸ்டி, டிராபேக் குறைப்பு காரணங்களால் பனியன் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்த நிலையில் வேலை குறைந்துவிட்டது. எனவே பெண்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் வருமான இழப்பு குடும்பத்தை நேரடியாக இடி போல் தாக்கக் கூடியதாக மாறிவிட்டது என்கின்றனர் பெண் தொழிலாளர்கள்.

பெண்களிடம் இது பற்றி பேசினால் ஏராளமான வேதனையான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக பெண் தையல் தொழிலாளி வேலுமணி கூறுகையில்; எனது கணவர் குடித்து விட்டு வீட்டுக்கு பணம்தருவத இல்லை. 13 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறேன். பண மதிப்பு நீக்கப் பிரச்சனைக்குமுன்பு வேலை சரியாக இருந்தது. வீட்டுவாடகை கொடுப்பதற்கு சவுரியமாக இருந்தது. வாரம் முழுவதும் வேலைக்கு சென்றால் ரூ.3000 சம்பளம் வரும். அதில் குழந்தையின் படிப்பு செலவிற்கு கட்டவும் சரியாக இருக்கும். ஆனால் இப்பொழுது வரி எல்லாம் வந்ததற்குப் பிறகு கம்பெனியில் வேலை சரியாக இருப்பது இல்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றார்கள். அதிலும் சில சமயம் வாரம் முழுவதும் வேலை இல்லாமல் போகிறது. இதனால் வீட்டு வாடகை கட்ட சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட கூட பணம் இல்லாமல் நகைகளை அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் குழந்தைகளின் படிப்பும், எங்கள் வாழ்வும் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்படுமே என்கிற அச்சம் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.