திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் சிரமம் இருப்பது உண்மை, ஆனால் துவண்டு போகக் கூடாது, அதை சந்தித்து முன்னேறிச் செல்ல முடியும். மனிதர்களுக்கு உணவுக்கு அடுத்து தேவைப்படுவது உடை. எனவே ஜவுளித் தொழிலுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பொறுத்தவரை கொள்கை வகுக்கும் அரசு, தொழில் முனைவோர், தொழிலாளர் மூன்று தரப்புக்கும் பொறுப்புள்ளது. இந்தியாவில் 65 சதவிகிதம் பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மூலப்பொருள் வளமும் குவிந்து கிடக்கிறது. எனவே இங்கு தொழில் வளர்வதற்கு அபரிமிதமான வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் வளர்ச்சி தரும் துறை ஜவுளித்தொழில் என்று அரசு அணுக வேண்டும்.

மூலப்பொருள்களை முழுக்க முழுக்க இறக்குமதி செய்து ஆடை உற்பத்தியில் ஈடுபடும் வியட்நாம் தற்போது ரூ.2.10 லட்சம் கோடிக்கு ஆடை ஏற்றுமதி செய்கிறது. அங்கு 25 லட்சம் பேர்தான் இதில் ஈடுபடும் தொழிலாளர்கள். ஆனால் பாரம்பரியமாக ஜவுளித் தொழில் செய்யும் சுமார் 130 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடிதான் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நடைபெறுகிறது.எனவே சுயதிருப்தி அடைந்து பயனில்லை. நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இங்குள்ள பிரச்சனைகள், தேவைகள் குறித்து அரசைப் புரியவைப்பது கஷ்டமாக உள்ளது. டில்லிக்கும், திருப்பூருக்கும் 2 ஆயிரம் கிலோமீட்டர் இடைவெளியில் அன்றாட தொழில்துறை பாதிப்பு, பிரச்சனைகளை அவர்களுக்கு தெரிவிக்க முடிவதில்லை. பின்னலாடை தொழில் வாரியம் ஒன்றை இங்கு அமைத்து, ஒரு அதிகாரியைப் பொறுப்பாக்கினால் அவர் மூலம் நம் பிரச்சனைகளை அரசுக்கு கொண்டு செல்ல முடியும்.

நம் நாட்டில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கும் நிலையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பண மதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது. ஆனால் விளைவுகள் எதிர்பார்ப்புக்கு எதிராக உருவானதுதான் அவலம். நம் அமைப்பில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி தவறு செய்வோர் தப்பிக் கொண்டனர். கெட்டவர்கள் தவறான வழியில் ஈட்டிய பணமும் நல்ல பணமாக மாற்றப்பட்டுவிட்டது. 1000 ரூபாய் லஞ்சம் என்பது இப்போது ரூ.2000 என மாறிவிட்டது. இது அமலாக்கியதில் ஏற்பட்ட கோளாறு. எப்படிப்பட்ட சூழலிலும் தப்பிவிடலாம் என்று தவறு செய்வோர் இப்போது ஊக்கம் பெற்றுவிட்டனர். அதேபோல் ஜிஎஸ்டி வரி விதிப்பும் வரவேற்கத்தக்க கொள்கைதான். ஆனால் ஒரு மூன்று மாதம் சோதனை அடிப்படையில் அதைக் கொண்டு வந்து, தொழில், வர்த்தகத்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதை சீர்செய்து விட்டு அமலாக்கி இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொண்டு வந்திருக்கக் கூடாது. ஜிஎஸ்டி பற்றி தொழில் துறையினருக்கு அறியாமை இருக்கிறது. அமைப்பு சாராமல் இருக்கும் தொழில் செய்வோருக்கு இந்த வரி விதிப்பினால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். முறையாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை அமலாக்கி இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி விதிப்பினால் செலுத்திய வரியை பெற்றுக் கொள்ளலாம் என்று வந்த சூழலில், டூட்டி டிராபேக் எனப்படும் ஊக்கத் தொகையை அரசு குறைத்துவிட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சலுகையில் சுமார் 3.5 சதவிகிதம் வரை குறைகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு அரசு ஆதரவு தேவை. டிராபேக் குறைப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிராபேக் தொகையை குறைக்காமல் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.