திருப்பூரில் 1990 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகள் ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் ஏற்றுமதியாளர் சி.மதன் கூறியதாவது: பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். குறிப்பாக விலைவாசி உயர்வு முக்கிய காரணம். பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருள் மற்றும் இதர துணைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது. பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பராமரிப்புச் செலவு அதிகரிக்கிறது. இதுபோன்ற விலை உயர்வு காரணமாக நாம் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளை உலகச் சந்தையில் போட்டி போடக்கூடிய அளவுக்கு குறைந்த விலையில் தர முடியவில்லை. குறைந்த விலையில் நாம் ஆடைகளை தயாரித்துத் தரமுடிந்தால் நமக்கு வேறு சலுகைகளை அரசு தர வேண்டியதில்லை. ஆனால் தொடரும் விலை உயர்வு காரணமாக தாக்குப்பிடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்கத்தால் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணம் இல்லாமல் அப்போது பிறரிடம் கடன்பட்டதில் இருந்து இன்னும்கூட அவர்கள் மீளவில்லை.ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஆறு மாதத்துக்கு மேலாக நாங்கள் செலுத்திய பணம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் செலவினத்தில் மாதம் சராசரியாக 8 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை கிடைக்காததால் நிறுவனம் செலவை சுருக்கிக் கொள்ள நேரிடுகிறது. இது தற்போதைய நடைமுறை பாதிப்பு. இதைவிட மோசமான பாதிப்புடிராப்பேக் ஊக்கத் தொகை குறைப்பு. அதிக அளவு ஆடைகளை தயாரித்துக் கொடுக்க ஆர்டர் எடுக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட திருப்பூரில் சரி பாதி ஏற்றுமதியாளர்கள் இந்த டிராபேக் தொகையை நம்பித்தான் தொழில் செய்து வருகின்றனர். உலக சந்தையில் அண்டை நாடுகளுடன் கடும் போட்டி இருக்கும் நிலையில் டிராபேக் தொகை மட்டும் கிடைத்தால்கூட போதும் என தொழில் செய்கின்றனர். டிராபேக் குறைப்பினால் லாபம் பாதிக்கப்பட்டு, பல நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர் எடுப்பதையே நிறுத்திவிட்டனர்.

வெளிநாட்டு வர்த்தகர்கள் எங்கே விலை குறைவாக ஆடை தயாரித்துத் தருகிறார்களோ அங்கே சென்றுவிடுகின்றனர். வங்கதேசத்தில் 25 சதவிகிதம், பாகிஸ்தானில் 40 சதவிகிதம் என டிராபேக் தரப்படும் நிலையில் அவர்களால் விலை குறைத்து ஆடை தயாரித்துத் தர முடியும். ஆனால் நாம் டிராபேக் இல்லாமல் போட்டி போட முடியாது.திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கான அடிப்படை தொழில் கட்டமைப்பு நன்றாக இருப்பதால், நாம் தாக்குப் பிடிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது. இதே போன்ற கட்டமைப்பை பிற நாடுகளும் நான்கைந்து ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் எங்கு விலை குறைவாக ஆடை கிடைக்குமோ அங்கேயே அதிக அளவு கொள்முதல் செய்கின்றனர். இதுவரை சாயப்பட்டறை, நூல் விலை, பஞ்சு விலை உயர்வு என பலவித பிரச்சனைகள் வந்தபோது அதில் இருந்து கடந்து திருப்பூர் மீண்டு வந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிக ஆழமாக உள்ளது. மத்திய அரசின் கொள்கையும் இங்குள்ள நிலையை புரிந்து சரி செய்யக் கூடியதாக இல்லை. எனவே திருப்பூர் தொழில்வரக்கூடிய காலத்தில் தாக்குப்பிடித்து நிற்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. திருப்பூர் என்ற அடையாளமே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: