திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாடையான ஜட்டி தயாரித்து உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பி வந்தவர் பெரியசாமி (வயது 52). ரூ.40 லட்சம் முதலீடு கொண்ட இவரது நிறுவனத்தில் 11 ஆண்கள், 4 பெண்கள் ஆக 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக இப்போது நிறுவனத்தை இழந்துவிட்டு இவரும் ஒரு தொழிலாளியாக வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறார். இந்த இரட்டைத் தாக்குதல் குறித்து கேட்டபோது பெரியசாமி கூறியதாவது: நல்ல நிலையில் என் தொழில் நடைபெற்றபோது வாரம் ரூ.10 லட்சம் அளவு வரை ஜட்டிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவேன். ஆனால் ரூ.1000, ரூ.500 செல்லாது என்ற மோடிஅரசின் அறிவிப்புக்குப் பிறகு, எனது நிறுவன வியாபாரம் அப்படியே சரிந்துவிட்டது. பணம் முடங்கியதால் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் முதல் விற்பனை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.5 முதல் ரூ.6 லட்சம் என்ற அளவுக்கு சரி பாதியாகக் குறைந்தது. ஓரளவு போராடி மீளும் நிலை ஏற்பட்டபோது ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தனர். இதனால் எனது வியாபாரம் மேலும் கடுமையான தாக்குதலுக்குள்ளாது.

மேலும் படிப்படியாக விற்பனை குறைந்து வாரம் ரூ.1 அல்லது ரூ.2 லட்சம் என்ற அளவுக்கு சுருங்கியது. அதன் பிறகு உற்பத்தி செய்த சரக்குகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் இங்கேயே தேங்கின. எனவே தொழிற்சாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. என்னிடம் பல ஆண்டு காலம் வேலை செய்த 15 தொழிலாளர்களிடமும் வேறு பக்கம் வேலைக்குச் செல்லும்படி சொல்லி அனுப்பிவிட்டு எனது தொழிற்சாலையை மூடிவிட்டேன். இருந்த முதலீட்டுத் தொகையில் வீடு கட்டி ஓரளவு அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்தாலும், அன்றாட வாழ்க்கை ஓட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறதே? என்ன செய்வது. வேறு வழியின்றி கூலிக்கு வேலைக்குச் செல்லத் தீர்மானித்தேன். கட்டிங் மாஸ்டராக வேலைக்குப் போனேன். ஆனால் இப்போது 50 வயதைக் கடந்துவிட்ட நிலையில் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதில் சிரமம் இருக்கிறது. இதனால் வேலைக்கும் முழுமையாகச் செல்ல முடியவில்லை. இருந்த தொழிற்சாலையையும் இழந்து, வேலைக்கும் செல்ல சிரமப்படும் நிலையில், எப்படியோ நாட்களைக் கடத்தி வருகிறோம். இந்தியா வல்லரசாக போவதாகவும், நல்லகாலம் பொறக்க போவதாகவும் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார். நாங்களும் நம்பினோம்.. ஆனால் இப்படி ஆகும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை..என்று வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியசாமி.

Leave A Reply

%d bloggers like this: