திருப்பூரில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, டிராபேக் குறைப்பு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காரணமாக ஒரு சில கோடி ரூபாய்களில் இருந்து அதிகபட்சம் ரூ.15 கோடி வரை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நடுத்தர மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் தற்போது இத்தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) தரப்பினர் கூறுகின்றனர்.

இது குறித்து டீமா சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: கடந்த 2010ஆம் ஆண்டு முதலே ஏற்றுமதி பின்னலாடைத் தொழில் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பஞ்சு ஏற்றுமதி, நூல் விலைஉயர்வு, சாயப்பட்டறைகள் மூடல் என தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. அத்துடன் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு இரட்டைத் தாக்குதல்கள் இத்தொழிலை நிலைகுலையச் செய்துவிட்டது. ஜிஎஸ்டி வந்தபோது வரி நடைமுறை எளிதாகி, வரி குறையும் என்று ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் வரவேற்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் தற்போது எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி இருக்கின்றனர். குறிப்பாக சிறு, நடுத்தர ஏற்றுமதியாளர்கள் ஜாப் ஒர்க் தொழிலை நம்பித்தான் உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு ஜாப்ஒர்க் நிலையிலும் 5 சதவிகிதம் வரி விதிப்பு என்பது கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

சிறு அளவு முதலீடு, வங்கிக் கடன், இதர பைனான்ஸ் என எப்படியாவது சமாளித்து ஆர்டரைச் செய்யலாம் என்ற முரட்டுத் துணிச்சலில்தான் இந்த சிறு, நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த “மெர்ச்சன்டைஸ் எக்ஸ்போர்டர்கள்” செயல்பட்டு வந்தனர். ஆனால் தற்போது பணமதிப்பு நீக்கத்தினால் சம்பளம் தர முடியாதநெருக்கடி ஏற்பட்டது. அதேசமயம் ஜிஎஸ்டியினால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது தொழில் செய்து சம்பாதித்துவிடலாம் என்ற முரட்டுத் துணிச்சல் இப்போது போய்விட்டது. மிகப்பெரும் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார ரீதியான பாதிப்புகளால்தான் தொழில்துறையைச் சேர்ந்த சிலர் சமாளிக்க முடியாமல், அவமானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துள்ளனர். இத்தனை நெருக்கடியிலும் மாநில அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. மாநில அமைச்சர்கள் கவனம் செலுத்தினால்தான் இங்குள்ள நிலை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் தானாக வளர்ந்த இந்த தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் தண்ணீர் கூட ஊற்றவில்லை. சிலர் தொழிலை விட்டுப்போய்விட்டனர். ஒருசிலர் தற்கொலை செய்து கொண்டனர். இன்னும் 10 சதவிகிதத்தினர் சொல்ல முடியாத நிலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகள் வருட கணக்கு முடிக்கும் சமயத்தில் இவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்போது இந்த விசயம் வெளிவரும். திருப்பூர் லட்சுமிநகர் பகுதியில் இரண்டாந்தர தையல் இயந்திரங்களை வாங்கி விற்பனை செய்வோர்கூட இப்போது சலித்துப்போய் வாங்குவதில்லை. இது போன்ற நெருக்கடிகள் இன்னும் சில மாதங்களுக்குப் பின் வெளியே தெரியவரும் என்றனர். திருப்பூரைப் பொருத்தவரை இனி பழைய காலம்போல் பெரியளவுக்கு வளர்ச்சி அடையும்வாய்ப்பு இல்லை. பணமதிப்பில் ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக தெரிகிறது. விலைவாசி கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 80 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பதால் ஏற்றுமதியும் பண மதிப்பில் அதிகரித்திருக்கிறது. ஆடைகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் ஏற்றுமதி அளவு அதிகரிக்கவில்லை என்பது தெரியும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.