பீகார் மாநிலம் பாட்னா அருகே பெகுசராய் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 23) கடந்த 8 ஆண்டுகளாக திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

அவரது அனுபவம் பற்றி தமிழிலேயே கூறியதாவது: நான் திருப்பூருக்கு வந்தபோது எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தனியாக வந்து வேலையில் சேர்ந்து கற்றுக் கொண்டேன். அப்போதெல்லாம் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவோ, நண்பர்களாகவோ திருப்பூருக்கு வந்தால் வேலை கிடைக்கும். ஆனால் இப்போது அப்படியில்லை. ஏற்கெனவே இங்கே வந்திருக்கும் உறவினர், நண்பர்கள் மூலம் மட்டுமே வருகின்றனர். இப்போது தாராளமாக வேலை கிடைப்பதில்லை.

இங்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நானே திங்கள்கிழமை காலை ஒரு கம்பெனிக்குள் போனால் ஒரு வாரம் முழுவதும் கம்பெனிக்குள்ளேயே தங்கி வெள்ளி அல்லது சனிக்கிழமை சம்பளத்தை வாங்கிக்கொண்டுதான் வெளியே வருவேன். அப்போது கை நிறைய பணம் கிடைத்தது. என் செலவு போக மாதம் தவறாமல் பீகாரில் இருக்கும் என் அம்மாவுக்கு தாராளமாக பணம் அனுப்பி வந்தேன். ஆனால் இப்போது வேலை குறைந்து வருமானமும் குறைந்துவிட்டது. எனவே தொடர்ந்து மாதந்தோறும் பணம் அனுப்ப முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சேமித்துத்தான் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வங்கி மூலம் பணம் செலுத்துகிறேன். இங்கு வீட்டு வாடகையும் கூடிவிட்டது. மற்ற செலவுகளும் கூடிவிட்டது. அதேசமயம் முன்பு அந்தந்த வார சம்பளப்பணம் அப்போதே கைக்கு வந்துவிடும். ஆனால் இப்போது வங்கி மூலம் சம்பளம் செலுத்துவதால் மாதக்கணக்கில் கூட பணம் பெறத்தாமதமாகிறது. சமீப மாதங்களாக ஊருக்குத்திரும்பிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார் சந்தோஷ்குமார்.

ரயில் பயணத்தில் தெரிவதென்ன? திருப்பூர் ரயில்வே வணிகப்பிரிவு உதவி மேலாளர் (கமர்ஷியல்) முத்துக்குமார் கூறுகையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரமாக சொல்ல இயலாது. ஏனென்றால் ஒவ்வொரு ஊர்களிலும் பல மாநிலத்தவர் ரயிலில் ஏறுவார்கள்.  வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் ஒன்றில் திருப்பூர் நிலையத்தில் சராசரியாக 500 பேர் வரை இறங்குகிறார்கள். ஆனால் திருப்பூரிலிருந்து 2015-16 ஆம் ஆண்டைக் காட்டிலும் இப்போது அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு பயணச்சீட்டுகளைப் பெறுகிறார்கள். ஆண்டு ஒன்றிற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமது சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்துதொழிலாளர்கள் வருகை இப்போதும் இருந்தாலும், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.