2016 நவம்பர் 8 ஒரு கறுப்பு தினம். பணமதிப்பு நீக்கம் என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட மினி எமர்ஜென்ஸி! இந்தியா முழுவதும் எல்லா சிறு, குறு, நடுத்தர தொழில், வர்த்தகத்தை நம்பி 30 கோடிப் பேர் இருக்கின்றோம்.

பின்னலாடைத் துறையைப் பொருத்தவரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி என்ற இரு பிரிவுகளைத் தாண்டி சிறு, குறு தொழில் மூன்று பிரிவுகளாகச் சொல்லலாம். அதில் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை தொழில் செய்வோர் ஒரு பிரிவினர். இவர்கள் ஆடை தயாரித்து ஈரோடு சந்தையை நம்பி வர்த்தகம் செய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர் பெரிய நிறுவனங்களின் ஜாப் ஒர்க் செய்யக்கூடியவர்கள். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீட்டில் தொழில் செய்வோர் இவர்கள். மூன்றாம் பிரிவினர் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை தொழில் செய்வோர். சொந்தமாக ஒரு லேபிள் பெயர் வைத்து ஆடைகள் உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் சரக்குகளை அனுப்பி வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவார்கள்.

இந்த மூன்று பிரிவினருமே செல்லா பணம், ஜிஎஸ்டி காரணமாக பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை தொழில் செய்வோருக்கு பணமதிப்பு நீக்க காலத்தில், பணச்சுழற்சி இல்லாததால் நடைமுறையில் அவசியச்செலவுகளைச் சமாளிக்க முடியாமல், உடனடியாக 25 சதவிகிதம் பேர் இத்துறையில் இருந்து காலியாகிவிட்டனர். முதலீட்டை இழந்து இப்போது சொந்த குறுந்தொழிலைக் கைவிட்டு பிற நிறுவனங்களில் மேலாளர்கள் போன்ற வேலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அளவுக்கு தொழில்செய்வோரில் பலர் சமாளித்து இருந்தாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு அவர்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து மீள முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்றாம் பிரிவினர் பணசுழற்சி நின்று போன நிலையில், பிற மாநிலங்களிலும் விற்பனை இல்லாமல், தங்கள் முதலீட்டில் ரூ.20 லட்சம் வரை தேவையை சமாளிப்பதற்கு இழந்துள்ளனர். அவர்கள் முதலீட்டு வரம்பு ரூ.5 லட்சம் என்ற அளவாக சரிந்து வர்த்தகம் குறைந்து விட்டது. மொத்தத்தில் கடந்த 10 மாதங்களில் இந்த மூன்று பிரிவினருக்கும் தொழில் லாபகரமாக இல்லை, தங்களைத் தக்க வைத்துக்கொண்டு, இனி ஏதோ ஒரு வகையில் தொழில் மீட்சி அடைந்து இழந்ததை மீட்டு லாபம் பெறலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில் ஜிஎஸ்டி ஒருமுனை வரி வந்தால் நல்லது என எதிர்பார்த்தோம். ஆனால் பசுவாக வரும் என்று எதிர்பார்த்த ஜிஎஸ்டி பிசாசு போல் வந்தது. குறிப்பாக சிறு, குறு தொழில் துறையினர் 20 சதவிகிதம் பேர் முறையான ஆர்.சி., டின் நம்பர் இல்லாமல் வேலை செய்யும் நிலையில்தான் உள்ளனர். ஆனால் அவர்கள் பில் போடாவிட்டாலும் அரசை ஏமாற்றுவதில்லை. பண்டல்களை அனுப்புவதற்கு பிறநிறுவனத்தினர் மூலம் பில் போட்டு வரி செலுத்தினர். தற்போது இவர்களில் 95 சதவிகிதம் பேர் ஜிஎஸ்டி எண் எடுத்துள்ளனர். விற்று வரவு ரூ.20 லட்சம் அளவுக்கு வருவோர் மட்டும் தான் ஜிஎஸ்டி எண் பெறவில்லை.தற்போது பணப் பரிவர்த்தனை வங்கி கணக்கு மூலம் செய்ய வேண்டிய நிலையில் அரசுக்குத் தெரியாமல் எந்த தொழிலும் நடக்காது. ஆனால் காஜா பட்டன், அயர்ன் தொழிலுக்கும் 5 சதவிகிதம் வரி, ஜெர்மன் தொழில்நுட்ப அச்சு இயந்திரத்திற்கும் 5 சதவிகிதம் வரி, செஸ்ட் பிரிண்ட் கையில் வைத்து செய்வோருக்கு 18 சதவிகிதம் வரி. இது அரசு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் ஆகும்.

இந்நிலையில்,கோரிக்கை வைத்தோ, போராடியோ அரசின் மனநிலையை மாற்றிவிடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. அரசை மாற்றுவதுதான் இதற்குத் தீர்வு. 2019 தேர்தல்தான் வழி! ஜிஎஸ்டியைப் பொறுத்த வரை, தொழில் நிலைக்கு ஏற்ப வரி நிர்ணயிக்க வேண்டும். விற்று வரவு ரூ.20 லட்சம் என்ற உச்ச வரம்பை ரூ.1 கோடி என்று உயர்த்தி நிர்ணயிக்கவேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு மத்திய அரசின் கடன் திட்டம் ஏதுமில்லை. முந்திரா திட்டத்தில் கூடரூ.5 கோடிக்கு முதலீடு இருப்பதைத்தான் சிறுதொழில் என கடன் தருவதாக கூறுகின்றனர். எனவே சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அளவுக்கு கடன் தரும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி கடன் தருவதை விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களுக்கு சில லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் கொடுத்தால் அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்கும். படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்து முன்னேற வாய்ப்புக் கிடைக்கும். நாட்டின் உண்மையான வளர்ச்சி சிறு, குறு தொழில்கள் வளர்ச்சியில்தான் இருக்கிறது. இதற்குரிய மாற்றுத் திட்டங்களை நிறைவேற்றினால்தான் குறு, சிறு தொழில்கள் வாழ முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.