திருவெண்ணெய்நல்லூர்,
இடத்தகராறு சம்பவத்தில் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்ததால் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பாரதி நகரைச்சேர்ந்தவர் செல்வராசு (60). இவரும், இவரது குடும்பத்தினரும் சேர்ந்து திருச்சி சென்னை சாலையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சிறு உணவகம் நடத்தி வந்தனர். இவர் இடத்திற்கு பின்னால் உள்ள இடத்தை பயன்படுத்தி வந்த மாற்று சமுகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பரும், இவரது மனைவி லட்சுமி, முருகன் ஆகியோர் செல்வராசுவிற்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 30.8.17 ல் இருதரப்பினரும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் தலித் சமூகத்தை சேர்ந்த செல்வராசு வின் மகன் சத்தியமூர்த்தியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மணிகண்டன், லட்சுமி, முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பகை வளர்ந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவகத்தில் படுத்திருந்த செல்வராசு தலையில் தாக்கப்பட்டு சாலையில் பிணமாக கிடந்துள்ளார். பாரதிநகரைச் சேர்ந்த சிலர் பார்த்து அரசூரில் ரோந்துப் பணியிலிருந்த காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவலர்கள் செல்வராசுவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு இரும்பினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து சந்தேக மரணம் என திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் பதிந்திருந்த வழக்கு தலித் வன்கொடுமை மற்றும் கொலைவழக்காக மாற்றப்பட்டது. இதில் செல்வராசுவின் மகன் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரில் லட்சுமி, முருகன், மனோகரன், சவுந்தர்ராஜன் ஆகியோர்மீது புகாரளிக்கப்பட்டதில் எதிரிகள் முருகன், மனோகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
செவ்வாயன்று(பிப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன், கிளைச் செயலாளர் ஜி.ரஞ்சித் உள்ளிட்டோர் செல்வராசுவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறிய சிபிஎம் தலைவர்கள், “காவல்துறையினர் முன்பு கொடுத்த புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கொலை சம்வத்தை தடுத்திருக்க முடியுமென்றும், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரை யும் கைது செய்ய வேண்டுமென்றும், இதன் தொடர்ச்சியாக வேறு சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டுமென்றும்” என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.