பரமத்திவேலூர், பிப்.5-
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, நல்லூர் கிராமபகுதிக்குட்பட்டு கவுண்டிப்பாளையம் உள்ளது. இதனை சுற்றி பெரும்பட்டி, வானகரம்பாளையம், வடிவேலாம்பாளையம், செட்டிப்பாளையம் உட்பட்ட கிராம பகுதிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வரும் இப்பகுதி மக்கள் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல திருச்செங்கோடு முதல் பரமத்திவேலூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கவுண்டிப்பாளையம் பேருந்து நிறுத்தினை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திருச்செங்கோடு மின்கிணறு பகுதியில் இருந்து பரமத்திவேலூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கவுண்டிப்பாளையம் பகுதியிலும் சாலை விரிவாக்கம் நடைபெற்றது. இதன்பின் அனைத்து இடங்களிலும் பேருந்து நிழல்கூடம் அமைத்த மாநில நெடுஞ்சாலை துறையினர் கவுண்டிப்பாளையம் பகுதியில் மட்டும் நிழற்கூடங்கள் அமைக்கவில்லை. அதுவும், பேருந்து நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதிமுறை இருந்தும் அதனை அமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் கவுண்டிப்பாளையம் பகுதி பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் வெயிலில் நின்று பேருந்துக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. இதேபோல், மாநில நெடுஞ்சாலையில் இருந்து கவுண்டிப்பாளையம், பெருமாப்பட்டி வழியில் பிரிந்து செல்லும் சாலையை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவில் போடாமல் தரமற்ற முறையில் வெறும் 20 மீட்டர் அளவிற்கு மட்டுமே அமைத்தனர். இதனால் சாலை போடப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளாகவே சாலையில் பிரிந்து செல்லும் இடத்தின் நடுவே பெரிய துளை ஏற்பட்டு விபத்தை எதிர்நோக்கி காத்துள்ளது. மேலும், சாலை விரிவாக்க பணியின் பொழுது பழைய மின்கம்பங்களை மாற்றி அமைப்பது வழக்கம். ஆனால், கவுண்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வீடுகளுக்கு செல்லும் தெருக்களின் தொடக்கத்தில் உள்ள மின்கம்பத்தினை இடமாற்றி அமைக்காமல் உள்ள காரணத்தினால் பெரும் விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் காணப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதியின் ஊராட்சி ஒன்றியத்தின் சிபிஎம் முன்னாள் கவுன்சிலரான மணிமாறன் கூறுகையில், கவுண்டிப்பாளையம் பகுதியில் இருந்து பெருமபாட்டி சாலை அமைக்கும் பணியின்போதே சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையானது 10 அடி உயரத்திற்கும் மேலிருந்தது. ஆகவே, பிரிவு சாலை அமைக்காமல் புதிய சாலை அமைக்கக்கூடாது என பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்தோம். இதன்பின்னரே பிரிவு சாலை அமைத்தோம். ஆனாலும், அவசர, அவசரமாக போடப்பட்ட சாலை தற்பொழுது குழி ஏற்பட்டு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சண்முகம் தெரிவித்தாவது, நிழல் கூடம் அமைத்தல், மின் கம்பங்களை மாற்றுதல், சாலையினை சரிசெய்தல் ஆகிய பிரச்சனைக்கு மாநில நெடுஞ்சாலை துறையினரின் மெத்தன போக்கே காரணம். இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதன்பின்னராவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இதனை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களை திரட்டி வலுவான போராட்டத்தினை முன்னெடுப்போம் என்றார்.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.