திருப்பூர், பிப்.5-
15 ஆண்டுகள் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரும் மக்கள் கூட்டத்தில் திளைத்ததுடன், புத்தக விற்பனையிலும் ரூ.1.25 கோடி என்ற புதிய உயரத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது திருப்பூர் புத்தகத் திருவிழா.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா, காங்கயம் சாலை பத்மினி கார்டனில் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற்று ஞாயிறன்று நிறைவடைந்தது. முன்னணி பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் என 94 நிறுவனங்கள் சார்பில் 145 அரங்குகள் அமைக்கப்பட்டன. புத்தகத் திருவிழாவுக்கு வரும் பார்வையாளர்கள், வாசகர்கள், புத்தக நிறுவனத்தார் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் உள்வாங்கி ஆண்டுக்கு ஆண்டு இந்த கண்காட்சியை மேம்படுத்தி வருகின்றனர். அதன்படி, பத்மினி கார்டனில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சிக்காக அரங்கத்தின் வடிவமைப்பு விசாலமாக, பார்வையாளர்கள் நெருக்கடி இல்லாமல் வந்து புத்தகங்களை ஆசுவாசமாக பார்வையிட்டு வாங்கிச் செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் தாராளமான இடவசதி செய்யப்பட்டிருந்தது. இது போக கழிப்பறை உள்ளிட்ட, புத்தகத் திருவிழாவரவேற்புக்குழு சார்பில் தனி ஏற்பாடு புதிதாக செய்யப்பட்டிருந்தது. தொடக்கம் முதலே புத்தக விற்பனை சீரான முறையில் நடைபெற்று வந்தது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதுடன் புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறும். பிற நாட்களில் தீவிர வாசகர்கள், புத்தக ஆர்வலர்களின் இயல்பான வருகை இருக்கும்.

செல்லா பண விவகாரத்தினால் கடந்த ஆண்டு பின்னலாடை தொழில் நகரமான திருப்பூர் திண்டாடியபோதும், மக்கள் புத்தகத் திருவிழாவைக் கைவிட்டுவிடவில்லை. அதற்குப் பிறகு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் திருப்பூர் மேலும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி தீரவில்லை என்பதுடன், இன்னும் நிலைமை மோசமடைந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருப்பூர் மக்கள் புத்தகத் திருவிழாவை கைவிடவில்லை. மாறாக முந்தைய 15 ஆண்டுகளிலும் இல்லாத அளவுக்கு நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மக்கள்கூட்டம் அலைமோதியது. பிரம்மாண்டமான இட வசதியுள்ள பத்மினி கார்டன் மைதானத்திலேயே இடம் போதாமல், காங்கயம் சாலையிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டிய  நெருக்கடி ஏற்பட்டது. புத்தக அரங்கங்களிலும் கூட்டம் அலைமோதியது, மாலை சிறப்புக் கருத்தரங்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இது தவிர இந்த கண்காட்சியில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம் காலை நேர நிகழ்வுகளாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த நிகழ்வுகளாகும். இவற்றில் மட்டும் ஏறத்தாழ 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நூறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் குழந்தைகள் படிப்பதற்கான நல்ல நூல்கள் வழங்கப்பட்டன.

இந்த நூல்களைக் கொண்டு நூறு பள்ளிக்கூட நூலகங்கள் புத்துயிர்ப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானதாக விற்பனையாளர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை வரவேற்புக்குழுவினர் தெரிவித்தனர். திருப்பூர் மக்களின் வரவேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில் இதைவிடவும் அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக நடத்த வேண்டிய பொறுப்பும் அதிகரித்து வருகிறது என்று புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுவினர் தெரிவித்தனர். இத்தகைய சிறப்பான வரவேற்பு அளித்துவரும் திருப்பூர் மக்களுக்கு மனப்பூர்வ நன்றி தெரிவிப்பதாகவும் வரவேற்புக்குழு நிர்வாகிகள் கூறினர்.

Leave A Reply

%d bloggers like this: