கோவை, பிப். 5-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச வழக்கில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நியமனம் செய்த பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரி முனைவர் பட்டதாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, பேராசிரியர் பணி நியமனங்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை துணைவேந்தர் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, அந்த நியமனங்கள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த முனைவர் பட்டதாரிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.