ஈரோடு, பிப்.5-
மின் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.ராசேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- மின்வயரிங் வேலைகளை உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரர் மூலம் தான் செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற நட்சத்திர குறியிட்ட மின்சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். உடைந்த சுவிட்சுகள், பிளாக்குகள், பழுதான வயர்கள் மின்சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருந்தால், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சுவிட்ச் போட்டவுடன் ஓடாத டேபிள் மேஜை பேன்களை கைவிரலால் இயக்க முயற்சி செய்யக்கூடாது. அப்படிச்செய்தால் கை விரல்கள் துண்டிக்க நேரிடும். மோட்டார் அயர்ன் பாக்ஸ், வாளியில் சொருகும் வாட்டர் ஹீட்டர் ஆகியவை மின் இணைப்பில் இருக்கும்போது கையால் தொடக்கூடாது.

சுவிட்சுகள் பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில்அமைக்க வேண்டும். குளியறை, கழிவறை, ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. சுவரின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பிவிசி பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்க கூடாது. மழைக்காலத்தில் மின்கம்பத்திற்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கம்பி அல்லது கயிறு கட்டி துணியை காய வைக்க கூடாது. மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களில் மின் பகிர்வு பெட்டிகள் ஸ்டே ஒயர்கள் அருகே வாகனங்களை நிறுத்தி பொருள்களை ஏற்றுவோ இறக்கவோ கூடாது.

மின்கம்பிகளை ஒட்டி வளர்ந்துள்ள மரக்கிளைகளை மின் வாரியத்தின் உரிய அனுமதி பெற்ற பிறகே வெட்ட வேண்டும். மின் கம்பங்கள் சாய்ந்தோ அல்லது மின்கம்பி அறுந்தோ கிடந்தலோ பொதுமக்கள் யாரும் தொடாமலும் யாரையும் தொட விடாமலும் உடன் மின்சார அலுவலங்களை தொடர்பு கொண்டு மின் இணைப்பை துண்டிக்கும் வரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஈஎல்சிபி ஐ மெயின் சுவிட்ச் போர்ட்டில் பொருத்தினால் மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம். மின் மோட்டார், மின் சாதனங்களுக்கு முறையான எர்த் பைப் இணைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: