மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியாக தலித் பழங்குடியின  சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவை சேர்ந்த  சுமார் 11,700 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலியாக தலித் பழங்குடியின சாதி சான்றிதழ் சமர்ப்பித்து கல்வி நிறுவனங்களில் சேர்பவர்களுக்கும், பணியில் சேர்பவர்களுக்கும் எக்காரணத்தை கொண்டும் பாதுகாப்பு அளிக்க முடியாது. இது போன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்பவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், உடனடியாக அவர்கள் பணி நீக்கப்படுவார்கள் என கடந்த ஜூலை 2017 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுமார் 11,700 ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் போலி சாதி சான்றிதழ் மூலம் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ந்தவர்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்கள் ஆன பிறகும் கூட மாநில அரசு நடவடிக்கை எடுக்காததை அடுத்து பழங்குடியினரின் உரிமைக்காக போராடும் தொண்டு நிறுவனங்கள், போலி சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்திருப்பவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யாவிடில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை விடுத்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

போலி சான்றிதழ் மூலம் பழங்குடியினரின் ஒதுக்கீட்டின் கீழ் கிளர்க் பணியில் சேர்ந்தவர்கள் பலர் கடந்த இருபது வருடமாக பணி செய்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஊழியர்கள் மாநில அரசின் துணை செயலாளர் போன்ற பதவிகளுக்கு உயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும், அமைப்புகளும் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் உத்தரவுப்படி, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது என்பது மாநில அரசுக்கு மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். இந்த விவகாரத்தில் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடக்கவேண்டும் என்பததோடு மட்டுமல்லாமல், ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ், சட்டம் மற்றும் நீதித்துறை , அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிரா ஊழியர்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை என சட்டம் மற்றும் நீதித்துறை, மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாநில தலைமை செயலாளர் கூறுகையில், நடவடிக்கை எடுக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படும் என்றார்.

இது குறித்து பொது நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவர்கள் மீதான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை, பணியில் இருந்த போது அவர்கள் பெற்ற வருவாயை மீட்டெடுப்பது போன்ற சிக்கல்கள் நீடிக்கும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: