ஈரோடு, பிப்.5-
மொடக்குறிச்சியில் நூற்றாண்டைக் கடந்து இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை இடித்து பேருந்து நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.செல்வராஜ் தலைமையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்திற்கு திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மொடக்குறிச்சி வட்டத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கவிருப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். அதேவேளையில், புதிய பேருந்து நிலையமானது கடந்த 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நூற்றாண்டை கடந்து இயங்கி வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியை இடித்துவிட்டு அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

இப்பள்ளியில் கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், நகரின் மையப்பகுதியில் உள்ள காரணத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் விரைவாகவும், பாதுகாப்புடன் வந்து செல்லக்கூடிய வகையில் உள்ளது. மேலும், இப்
பள்ளியில் மாணவர் சேர்க்கை எப்போது குறைவின்றி இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற வரலாற்று சிறப்புக்களைத் தாங்கி நூற்றாண்டைக் கடந்து ஊரின் முக்கிய அடையாளமாக திகழும் இப்பள்ளியை இடித்துவிட்டு பேருந்து நிலையம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.