ஈரோடு, பிப்.5-
தாளவாடி பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடக்கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு சுமார் 2 வருடங்கள் கடந்துவிட்டன. அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. இதனால் விபத்துக்களோ, பிரசவ சிகிச்சைக்காகவோ அல்லது மேல் சிகிச்சைகளுக்காக சத்தி, கோபி, ஈரோடு, கோவை மற்றும் அருகிலுள்ள கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர், மைசூர் போன்ற பெரும்நகரங்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, தாளவாடியிலிருந்து சுமார் 60கி.மீ தொலைவில் சத்தியமங்கலமும், 120 கி.மீ.தொலைவில் ஈரோடும் உள்ளது. இதனால் பெண்கள் மகப்பேறு காலங்களில் பிரசவ வழியில் சுமார் 3 மணி நேரம் வலியுடன்திம்பம் மலைப்பாதையில்பயணிக்க வேண்டியஉள்ளது. மேலும், கர்நாடகாபகுதியில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தாள், தமிழக அரசின் சார்பில் கிடைக்க வேண்டிய உதவித்தொகைகள் கிடைப்பதில்லை.

மேலும், திம்பம் மலைப்பாதை வளைவுகள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மண்சரிவுகள் அல்லது வாகனங்கள் பழுதடைந்துவிட்டால் அவசர ஊர்திகள் திம்பம் மலைப்பாதையில் செல்ல முடியாது. இதனால் உயிர்பலிகள் அதிகமான நிகழும் வாய்ப்பு உள்ளது. இதேபோல், பெஜ்லட்டி, மாவனத்தும் போன்ற மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாமல் உள்ளது. ஆகவே, தாளவாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளை, அரசு பொது மருத்துவமனையாக நவீன வசதிகளுடன் மேம்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அப்பகுதி மக்கள் மற்றும் விடியல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.