ஐதராபாத்,

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக கூறி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை ஆந்திர காவலர்கள் கைது செய்துள்ளனர்.

திருப்பதி அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ரோந்து சென்ற போது, கரக்கம்பாடி சாலையில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி காரின் ஓட்டுநரான வேலூர் தோட்டபாளையம் பகுதியை சேர்ந்த அஜீத் மற்றும் கர்நாடக மாநிலம் ஒஸ்கோட்டை சேர்ந்த இயேசு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கடத்தி செல்ல தயாராக மங்களம் அருகே மறைத்து வைத்திருந்த 9 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். மேலும் இதேபோன்று ரங்கம்பேட்டை அருகேவும் 7 செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர் அஜித் என்பது தெரியவந்தது. தான், பகுதி நேர ஓட்டுநராக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கும் செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பும் இல்லை என அஜித் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதனிடையே செம்மரம் கடத்தி செல்ல அஜித் மற்றும் இயேசுவை அனுப்பி வைத்த பிரபு என்பவரைப் பிடிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர் அஜீத்தை காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி காவல் ஆய்வாளர் முரளியிடம் கேட்க முயன்ற போது அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: