கோவை, பிப். 5-
கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக உறுப்புதான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

கோவைப்புதூர் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரின் மனைவி ரோசி (65). மூளையில்ரத்த குழாய் பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள ஒரு தனி
யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் (பிப்.3) சேர்க்கப்பட்டார். ஆனால், ஞாயிறன்று காலை அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள், அவரின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க ரோசியின் உறவினர்கள் முன்வந்தனர். இதனை தொடர்ந்து திங்களன்று மருத்துவர்கள் அவரின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்டவற்றை அறுவைசிகிச்சை முறையில் அகற்ற முடிவு செய்தனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்தார். இதனால், மருத்துவ குழுவினர் இறந்த ரோசியின் இரண்டு கண்கள் மற்றும் தோல் ஆகியவற்றை அகற்றினர். இரண்டு கண்கள் கோவை அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் இருவருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தோல் கங்கா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். நோயாளி இறந்த காரணத்தினால் அவரின் கண்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டுள்ளது. மனித உடலில் 2.5 மீ. அளவில் தோல் இருக்கிறது. இதனை பிரித்து தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அளித்துள்ளோம். வருங்காலத்தில் இதயம், சிறுநீரகம், கல்லீரல் என அனைத்து உறுப்புகளையும் தானமாக பெற்று பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வசதிகளும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளது. பொதுமக்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.