நாகர்கோவில், பிப்.4-
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்கிக் கொண்டே மதவெறியை தீவிரமாக ஆதரிக்கும் மத்திய பாஜக அரசு மறுபுறத்தில் இந்திய நாட்டை அமெரிக்க ராணுவக் கூட்டாளியாக மாறி அடகுவைக்க முயற்சிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சாடினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கன்னியாகுமரி மாவட்ட மாநாட்டை யொட்டி திங்கள் நகரில் சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: கட்சியின் 22ஆவது அகில இந்தியமாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் ஹைதரா பாத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நாடெங்கும் மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்ட மாநாடுகள் முன்னதாக நடந்திருக்க வேண்டும். ஒக்கி புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெறு கின்றன. நாடு இன்று மோசமான கட்டத்தில் உள்ளது. ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக அரசு, நமது நாடு ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அனைத்து அடிப்படை மாண்புகளையும் தகர்த்துக்கொண்டி ருக்கிறது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப் படுகிறது. மதச்சார்பின்மையோடு உடன்பாடில்லாத ஆர்எஸ்எஸ் நிலைபாடே இதற்கு காரணம். மதச்சார்பின்மையை தகர்க்க வகுப்புவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. பலமொழிகள், பல மதங்கள் போன்ற பன்முகத்தன்மையை ஆர்எஸ்எஸ் தகர்க்க முயற்சிக்கிறது. நாங்கள் உண்பதையே நீங்கள் உண்ண வேண்டும் எனக்கூறுவதோடு வீடுகளில் புகுந்து பரிசோதனை செய்கிறார்கள். கொலை செய்கிறார்கள்.

ராஜஸ்தானில் லவ் ஜிகாத் எனக்கூறிஒரு மனிதனை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். அந்த மனிதன் அலறித்துடிப்பதை வீடியோ எடுத்து வெளி யிட்டதை நாமெல்லாம் காண வேண்டிய கொடுமை நிகழ்ந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான குரல்கள் எழுந்தன. இந்த படுகொலையை பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் நியாயப்படுத்திய தோடு புகழவும் செய்தார்கள். கொலை யாளியின் வங்கிக் கணக்குக்கு பெருந் தொகையை சங்பரிவார் அமைப்பினர் அனுப்பியுள்ளனர். ராஜஸ்தானில் கிறிஸ்துமஸ் தொடர்பான ஒரு நிகழ்வை பள்ளிக்குழந்தைகளுடன் நடத்திய போது சங்பரிவார் அமைப்பினர் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, காவல்நிலையம் கொண்டுசென்று போலீசுடன் இணைந்து மீண்டும் தாக்கி யுள்ளனர். தகவல் அறிந்து விசாரிக்கச் சென்ற மக்களையும் தாக்கியுள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து பேராயர் புகார் தெரிவித்தார். அதன்பிறகு பேட்டியளித்த அவர், இந்த அரசின் நடவடிக்கைகள் மீது அவநம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாடு நமக்கு பாதுகாப்பானதாக இல்லை என சிறுபான்மை மக்கள் கருதத் துவங்கியிருக்கிறார்கள்.

மற்றொருபுறம் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தலித் எழுச்சியின் ஆண்டுவிழாவுக்கு 5 லட்சம் மக்கள் திரண்டனர்.அந்த தலித்மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி யினரைத் தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தினார்கள். ஒருவர் கொல்லப் பட்டார். பல்வேறு பகுதிகளிலும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. தினமும் 3 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகள், வீடுகள் தகர்ப்பு எனப் பல வடிவங்களில் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது மிகவும் அதிகம். ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டுள்ள நால்வர்ண கொள்கையில் சூத்திரர்களுக்கு கீழாக உள்ள தலித்துகளுக்கு இடமில்லை. பட்டியலின மக்களை மனிதர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்பதையே இந்த தாக்குதல்கள் நமக்கு உணர்த்து கின்றன. காங்கிரஸ் தலைமையிலான அரசு கடைசியாக பத்து ஆண்டுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாஜக அரசு அமைய வழிவகுத்தது. மன்மோகன் அரசு மக்களுக்கு எதிரான கொள்கையை அமலாக்கியது. விவசாயி கள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டார்கள். பாதிப்புகளை எதிர்த்து தொழிலாளர்கள் நாடுமுழுவதும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்கள் மிகுந்த இன்னல்களை அனுபவித்தனர். நாட்டின் நலனை அமெரிக்கா விடம் அடமானம் வைக்கவும் துணிந்ந்தார்கள். இவற்றை பாஜக சாதக மாக்கிக்கொண்டது. இடதுசாரிகளின் வலுகுறைவாக உள்ள மாநிலங்களில் காங்கிரசுக்கு பாஜகவை மாற்றாக கருதினார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கை இடதுசாரிகளிடம் மட்டுமே உள்ளன.

பாஜக அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய கொள்கைகள் ஏற்கனவே காங்கிரஸ் அரசால் கடைப் பிடிக்கப்பட்டவையாகும். இப்போது அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக இந்தியாவை மாற்றும் நிலைபாட்டை பாஜக அரசு எடுத்துள்ளது.  பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கிக்கு கூட தெரியாமல் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் ஆலோசிக்கவில்லை என பகிரங்கமாக அவர் தெரிவித்தார். பணமதிப்பு நீக்கத் தால் பலரது வாழ்க்கை தகர்ந்தது. நாட்டின் முன்னேற்றம் தடைபட்டது. அதையடுத்து முன்னேற்பாடு ஏதும் இல்லாமல் ஜிஎஸ்டி அமலாக்கம் நடந்தது. அதன் விளைவாக அனைத்து துறைகளும் தகர்ந்தன. நாடும், மக்களும் பின்னோக்கித் தள்ளப்பட்டதை நாம் பார்த்து வருகிறோம். இதில் மாற்றம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லை. பாஜகவின் இந்த பட் ஜெட்டை ஆர்எஸ்எஸ், பிஎம்எஸ் போன்ற அமைப்புகள் கூட ஏற்கவில்லை. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பே இதற்கு காரணம். தொழிலாளர்களின் வேலையை பறிக்கும் பட்ஜெட் இது. பொதுத்துறைகளை தகர்க்கும் கொள்கை பட்ஜெட் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. மக்களுக்கு விரோதமான இந்த பட்ஜெட்டால் கடும் பாதிப்புகளை இந்த தேசம் சந்திக்கும். வகுப்புவாதத்தை தீவிரப்படுத்தி, மக்களை திசைதிருப்பும் முயற்சியை மேற்கொள்வார்கள். இவற்றுக்கு எதிராக பெருமளவு மக்கள் பங்கேற்கும் போராட்டங்கள் நடைபெற வேண்டும்.

கேரள மாநில பட்ஜெட் பிப்.2 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒக்கியால் பாதிக்கப்பட்ட மக்களது மறுவாழ்வுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளம் பொரு ளாதார வலுமிக்க ஒரு மாநிலம் இல்லை. ஆனாலும் நாங்கள் எங்களால் முடிந்த அதிகபட்ச ஒதுக்கீட்டை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்துள்ளோம்.எளிய மக்களின் நலன்களை தவிர்த்து ஒரு இடதுசாரி அரசால் சிந்திக்க முடியாது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.