ஊழல் முறைகேட்டில் வசூலாகும் பணத்தை முறையாக பங்கு பிரிக்காமல் தானே சுருட்ட நினைத்ததால் பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பல்கலை கழக வட்டாரத்தில் தகவல் உலா வருகிறது.

நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள், பணி விலகல் சம்பவங்களுக்கு பஞ்சமில்லாத இடமாக தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 108 க்கும் மேற்பட்ட இணைவுக் கல்லூரிகள், 3 உறுப்புக் கல்லூரிகள், 31 ஆய்வு நிறுவனங்கள் மூலம் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், நேரடியாகவும், தொலைதூர கல்வி வழியாகவும் ஆயிரக்கணக்கான பிஎச்.டி. மாணவர்களும், கலை-அறிவியல் பிரிவு மாணவர்களும் பயின்று வருகின்றனர். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்ட நாட்டின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகம் 14 ஆவது இடத்தையும், தமிழக அளவில் கலை – அறிவியல் பல்கலைக்கழகங்கள் அளவில் முதலிடத்தையும் பிடித்தது.

மாநிலத்தின் சிறந்த பல்கலைக்கழகமாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஊழல் புகார்களும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. கணபதிக்கு முன்னாள் துணை வேந்தராக இருந்த ஜேம்ஸ் பிச்சை இவரது பதவி காலத்தில், விதிகளுக்கு புறம்பாக இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றப்படாமல் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியது, பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை ஒப்பந்தப்புள்ளி கோராமல் பணி நடைபெற்றது. அத்துடன், பழைய தேர்வு விடைத் தாள்களை ஏலம் விட்டதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த தொடர் குற்றச்சாட்டு மற்றும் புகாரின் அடிப்படையில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிளாடிஸ் லீமா ரோஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகப் பணியாளர்கள் நான்கு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அப்போது துணைவேந்தராக இருந்த ஜேம்ஸ்பிச்சை சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஓய்வு பெரும் நாளன்று பதிவேட்டில் கையெழுத்தியிடாமலேயே ஓய்வுபெற்றார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துணைவேந்தர் ஆ.கணபதி பொறுப்பேற்றார். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், நடுவலூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு நிலைகளில் சுமார் 35 ஆண்டுகள்பணியாற்றி, உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவராக ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சொர்ணலதா மற்றும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் மருத்துவர்களாக உள்ளனர்.

பாரதியார் பல்கலையில் துணைவேந்தரக கணபதி பதவியேற்ற அதே ஆண்டில் பல்கலைக்கழகத் துறைகள், உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருந்த 88 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் முடிவு செய்தது. ஜூலை மாதம் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தேர்வு முறைகள் ரகசியம் காக்கப்படுவதாகவும், முறைகேடுகளுக்கு இடமளிப்பதாகவும் பல புகார்கள் எழுந்தன. இருப்பினும் கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதத்தில் 80 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்தது. உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக உயர் கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், பணியிடங்களை நிரப்பும் நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி உயர் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.ஆனால், உயர் கல்வித் துறையின் இந்த உத்தரவு நகலை பல்கலைக்கழகத்தின் அப்போதைய பதிவாளர் பி.எஸ்.மோகன் தன்னிடம் வழங்கவில்லை என்று துணைவேந்தர் கணபதி குற்றஞ்சாட்டினார். இதையடுத்து பதிவாளர் மோகன் தனது பதவியை ராஜினமா செய்தார்.

இதற்கிடையே, பல்கலைக்கழக துறைகளில் பல பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியில்லாத நபர்களை தேர்வு செய்திருப்பதாகவும், இல்லாத துறைக்கு பேராசிரியர்களை நியமித்ததாகவும், ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ரூ.45 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டே நிரப்பப்பட்டதாகவும் ஆதாரங்களுடன் பல்வேறு புகார்கள் உயர் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டன. இது தொடர்பாக உயர் கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினர் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, பல்கலை கழக பணி நியமனத்தில் முறைகேடாக வசூலிக்கப்படும் பணம் அதிகாரவர்க்கத்தின் அத்தனை மட்டங்களுக்கும் முறையாக பங்கு பிரிக்கப்பட்டு பலனடைந்து வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசு செயல்பாடற்ற நிலையில் திக்குமுக்காடி வந்தது. மேலும் அமைச்சர்களின் உளறல்கள் நகைச்சுவை காட்சிகளை காண்பது போல மக்கள் எள்ளி நகையாடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல்வேறு அதிகாரிகள் நானே ராஜா நானே மந்திரி என்கிற தோரணையில் செயல்பட ஆரம்பித்தனர்.

இதைப்போன்றே துணைவேந்தர் கணபதியும் செயல்பட ஆரம்பித்துள்ளார். மொத்தத்தையும் தானே சுருட்ட நினைத்த்தால் இதற்குமேலும் இவர் நீடிக்ககூடாது என வலைவிரித்து காத்துக்கிடந்தனர்.இதில், பல்கலைக்கழக பேராசிரியர் தர்மராஜ் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் (பொறுப்பு) மதிவாணன் ஆகியோர் துணை வேந்தர் கணபதிக்கு பணம் வாங்கி கொடுக்கும் தரகராக செயல்பட்டதை கண்டுபிடித்தனர். மேலும், கணபதியின் மனைவி சொர்ண லதா லஞ்சத்துக்கு உடந்தையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பேராசிரியர் சுரேஷ் அளித்த புகார் துணைவேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடிக்க போதுமானதாக இருந்தது. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்பேரில் சுரேஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கணபதியிடம் அளித்துள்ளார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைவேந்தரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இதனையறிந்த துணைவேந்தர் கணபதி, தன்னிடம் இருந்த ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுடன் கழிவறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளார். பின்னர் ரூபாய் நோட்டுகளைக் கிழித்து கழிவறைக்குள் போட்டு நீரைத் திறந்துவிட்டுள்ளார்.இதையடுத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் கழிவறையில் கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்த ரூ.56 ஆயிரம் மதிப்பிலான 28 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு துணைவேந்தர் கணபதி மற்றும் தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் இரவோடு இரவாக கைது செய்யட்பட்டு கோவை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் பிப்ரவரி 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தற்போது பேராசிரியர் மதிவாணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலை கழகங்களில் பணியிடங்களை நிரப்ப முறைகேடாக வசூலிக்கப்படும் பணம் முறையாக பங்கு பிரித்து உரிய இடத்திற்கு செல்லும்வரையில் எந்த குற்றசாட்டு எழுந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் மொத்த பங்கை தானே சுருட்ட நினைத்த துணைவேந்தரின் நடவடிக்கையை முடக்கவே தற்போது கைதுவரை சென்றுள்ளதாக பாரதியார் பல்கலைகழக வட்டாரங்களின் மைன்ட் வாய்ஸ் சத்தமாக கேட்க ஆரம்பித்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுaகளில் எழுந்துள்ள அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டிருக்கும் செய்தி உயர் கல்வித் துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள், முறைகேடுகள் யாவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர் கதையாகி வருகின்றன.

எனவே, துணைவேந்தர்கள் சுவாமிநாதன், ஜேம்ஸ்பிச்சை ஆகியோரின் பதவிக் காலங்களில் எழுந்த அனைத்து புகார்கள் குறித்தும் முறையாக, நேர்மையான முறையில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தி, அவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும். தமிழக உயர் கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழலுக்கு முடிவு கட்ட அரசும், வேந்தரும் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.