தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி,3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி,3 டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டெஸ்ட் போட்டிகளை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில்,ஒரு நாள் தொடரை எதிர்கொண்டது இந்திய அணி.இதில் டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் பெலுக்வாயோ, கேப்டன் டு பிளசிஸ் நீக்கப்பட்டு டப்ரைஸ் ஷாம்சி, கயா ஜோன்டா ஆகியோர் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

சஹால் அபாரம்
தென்னாப்பிரிக்க அணிக்கு ஆம்லா, குயிண்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்திருந்த போது, புவனேஷ்வர் குமார் பந்தில் ஆம்லா (23) சிக்கினார். சஹால் ‘சுழலில்’ குயிண்டன் டி காக் (20) அவுட்டாகினார். குல்தீப் யாதவ் பந்தில் கேப்டன் மார்க்ரம் (8), டேவிட் மில்லர் (0) ஆகியோர் அவுட்டாகினர். ஜோன்டா, டுமினி தலா 25 ரன்கள் எடுத்து சஹால் பந்து வீச்சியில் அவுட்டாகினர். மீண்டும் வந்த குல்தீப் இம்முறை ரபாடாவை (1) வெளியேற்றினார். கிறிஸ் மோரிசை அவுட்டாக்கிய சஹால், ஒரு நாள் அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். தென்னாப்ரிக்க அணி 32.2 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால் 5 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

தவான் அரை சதம்
எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் 15 ரன்கள் எடுத்து ஏமாற்றமளிக்க, பின் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் கோஹ்லி ஜோடி ‘சூப்பராக’ விளையாடியது. இவர்களின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க வெற்றி எளிதானது. தவான் அரை சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. தவான் (51), கோஹ்லி (46) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை சூழலில் அசத்திய சஹால் தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம், தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி வரும் பிப். 7 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: