கோவை, பிப். 4–
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் 15 ஆண்டுகாள நியாமான சட்டப்படியான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் இயக்கம் மேற்கொள்வது என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமையில் சுந்தரம் வீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்அந்தோனி ராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் 2014 திருத்தப்பட்ட மோசடி தடுப்பு விதிப்படி ஊழியர்களின் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையில் 40 ஊழியர்கள் மீதும், மண்டலத்தில் 150க்கும் மேற்பட்டோர் மீதும் எவ்வித விசாரணையுமின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும். இதுகுறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது எனவும், உடன்படாத பட்சத்தில் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், 15 ஆண்டுகளாக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டப்படியான கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது, இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்ட இயக்கங்களை மேற்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.