கோவை, பிப். 4-
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை ரயில்வே பணிமனையில் கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம் ரூ.1.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய முக்கிய ரயில்நிலையங்கள் உள்பட 194 ரயில்நிலையங்கள் உள்ளது. இதில் கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் ரயில்களை பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிக்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ரயில் நிலையங்களில் நெடுந்தூர ரயில்கள் அதிக அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கோவையில் மட்டும் சுமார் 350க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களின் பெட்டிகளை சுத்தப்படுத்த தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது.எனவே வீணாக செல்லும் இந்த கழிவுநீரை மறுசுழற்சி செய்ய கோவை பணிமனையில் கழிவுநீர் மறுசுழற்சி கூடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கழிவு நீர் மறுசுழற்சி கூடம் ரூ.1.2கோடி மதிப்பீடு கொண்டது. இந்த கூடத்தில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதன்மூலம் தண்ணீர் அதிக அளவில் சேமிக்க முடியும். மேலும் இந்த மறுசூற்சி செய்த நீரை பிளாட்பாரங்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். ஆறு மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இந்த கழிவுநீர் மறுசுழற்சி கூடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.