மேட்டுப்பாளையம், பிப்.4-
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை சிட்டேபாளையம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியால் தங்களது கிராமத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் அனைத்துமே பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை சிட்டேபாளையம் பகுதியில் உள்ள இரும்பொறை கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்பதால் தங்களது வீடுகளின் சுவர்கள் விரிசல் விடுவதோடு குவாரியில் இருந்து கிளம்பும் பாறை துகள்கள் தங்களது விவசாய பயிர்கள் மீது படிந்து விளை பொருட்கள் அனைத்தும் நாசமடைவதாக தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், இது குறித்து பல முறை உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஞாயிறன்று, சட்ட விரோதமாக மிக அதிக சக்தி கொண்ட வெடி மருந்துகளை பயன்படுத்தும் இக்கல்குவாரியை மூட வலியுறுத்தி இரும்பொறை கிராமமக்கள் மேட்டுப்பாளையம் – சத்தியமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ், கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் சம்பத்தப்பட்ட கல்குவாரியினையும் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரியின் இயக்கம் நிறுத்தப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்த பின்னர்சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.