திருப்பூர், பிப். 4-
ஆதித்தன்மை கொண்ட வளமான பண்பாட்டு மக்கள் திரளின் மொழியாக தமிழ் இருந்திருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பெருமிதத்துடன் கூறினார். 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வெள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி மகாதேவன் கூறியதாவது: அற்புதமான கலாச்சாரம், பண்பாடு, மண் சார்ந்த ஆதித்தன்மை கொண்ட மக்கள் திரளின் மொழியாக தமிழ் இருந்திருக்கிறது. மனிதகுலம் தோன்றியதில் இருந்து எந்த காலத்தில் சிந்தனை விரிய ஆரம்பித்ததோ அவற்றை நோக்கி தன் உணர்வைச் செலுத்திய ஆகச்சிறந்த படைப்புகளை தமிழர்கள் வழங்கியிருக்கிறார்கள். உலகின் நுண்ணிய பண்பை விட ஆகச்சிறந்த நுட்பத்தை படைப்புகளில் அப்போதே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆன்மிகம், அறிவியல், கணிதம், வானியல் சரித்திரம் என அறிவுலகம் வேண்டும் வகைகள் தற்போது புனைந்து சுருட்டப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே, பாபிலோனிய சித்தாந்தங்களுக்கு முந்தைய சரித்திரத்தைக் கொண்டதாக தமிழ் சார்ந்த விசயங்கள் உள்ளன. பிரமீடுகளின் உள்ளே ஆய்வு செய்த அறிஞர்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தேக்கு கட்டைகள், வரி வடிவ எழுத்துகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆதிகாலம் தொட்டுஞானம், அறிவு சார்ந்து தமிழ் இருந்திருக்கிறது. படைப்பின் உச்சத்தைத் தொட்டுக் காட்டிய மூன்று சங்கங்கள் இருந்திருக்கின்றன. அறத்தை வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்பதை தொல்காப்பியம் காட்டுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை பதிந்திருக்கிறது. களப்பிரர் காலத்தில் ஒதுங்கி நின்று வீரமாய் வாழ்ந்திருக்கிறது தமிழ். ஏழாம் நூற்றாண்டு வரை இந்நிலை இருந்தது.

பின்னர் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என ஒரு பிரிவாகத் தோன்றி தமிழ் வளர்த்தனர். தமிழர்களின் கலாச்சாரம், மொழியை உலகளாவிய வழியில் செலுத்தியது கம்பன். தமிழை உயர்த்திப் பிடிக்கவே கம்பன் ராமாயணத்தைச் செய்தான்.16ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, வீரமாமுனிவர், சீகன்பால், ஜி.யு.போப் என வெளிநாட்டைச் சேர்ந்தோர் தமிழ் வளர்த்தனர். நம் வாழ்க்கை அறம் சார்ந்த வாழ்க்கை, நம்மை நாமே அறிய, நம் பண்பாடு, கலாச்சாரம், மொழியை அறிய புத்தகங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. இவ்வாறு நீதிபதி மகாதேவன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.