லக்னோ;
உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் 48 மணி நேரத்தில் 15 என்கவுண்ட்டர்களை நடத்தி, 24 பேரை கைது செய்துள்ளது.இந்த என்கவுண்ட்டரில் பலர் காயமடைந்து இருப்பதுடன், ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி, 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை வரை 15 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. லக்னோ, கான்பூர், கோரக்பூர், மீரட், முசாபர் நகர், புலந்த்சாஹர், ஷஹரான்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
முசாபர்நகரில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் இந்திராபால் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதேபோல, போலீசாரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நீண்டகாலமாக தேடப்படும் நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாக உத்தரப்பிரதேச டிஜிபி ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். போலீசார் கைது செய்ய சென்ற இடத்தில் குற்றவாளிகள் தாக்க முயற்சித்ததைத் தொடர்ந்தே, தற்காப்புக்காக என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக முதல்வராக சாமியார் ஆதித்யநாத் கடந்த 2017 மார்ச் 19-ஆம் தேதி பதவியேற்றார். அவர் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கடந்த பத்து மாதங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து ஏற்கெனவே, தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி கண்டித்திருந்தது. ஆனாலும், என்கவுண்ட்டர் சம்பவங்கள் குறையவில்லை.
ஆதித்யநாத் உ.பி. மாநில முதல்வராகப் பதவியேற்ற 12ஆவது நாளில் சஹரன்பூர் என்ற இடத்தில் முதல் என்கவுண்ட்டர் சம்பவம் நடந்தது. இதில் குர்மித் என்பவர் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். கடைசியாக ஜனவரி 9-ஆம் ஆம் தேதி ஆசம்கார் பகுதியில் என்கவுண்ட்டர் நடந்தது. இந்நிலையில் 922 நபராக இந்திராபால் என்பவர் மீது என்கவுண்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தருவதற்குப் பதிலாக, உத்தரபிரதேச மாநில காவல்துறையே என்கவுண்ட்டர் என்ற பெயரில் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 11 மாதங்களில் 34 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.