கான்பூர்;
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சம் வாங்கியதாக ஜிஎஸ்டி ஆணையர் சன்சார் சந்த், ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் அதிகாரிகள் 3 பேர் மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.சன்சார் சந்த்தின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையரான சன்சார் சந்த், கான்பூர் ஜிஎஸ்டி ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர், லஞ்சம் வாங்குவதையே தொழிலாக வைத்திருப்பதாக சிபிஐ-க்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்தின் பேரில் கடந்த 6 மாதங்களாக சிபிஐ அவரைக் கண்காணித்து வந்தது.

கான்பூர் மற்றும் தில்லி முழுவதும் உள்ள அவரின் நண்பர்கள், உறவினர்களையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இதில், பெரும் புள்ளிகளிடமிருந்து சன்சார் சந்த் அதிக அளவிலான லஞ்சம் வாங்குவதையும், அவரின் பின்னணியில், ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வந்ததையும் சிபிஐ கண்டுபிடித்தது.

சன்சார், பணமாக மட்டும் லஞ்சம் பெறுவது கிடையாது; டிவி, மொபைல் போன், ஏசி போன்று பொருள்களாகவும் லஞ்சம் பெற்றுக் கொள்வார்; இவருக்கு உறுதுணையாக, இவரின் மனைவி செயல்பட்டுள்ளார்; கான்பூரில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், சன்சாருக்கு லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி கட்டாமல் தப்பித்து வந்துள்ளனர்; என்பன விவரங்களையும் சிபிஐ திரட்டியது.சன்சார் சந்த்திற்கு கீழே, வருவாய்த் துறையில் பணிபுரியும் மூன்று அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலமாக பெரும் புள்ளிகளைத் தொடர்புகொண்டு லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வெள்ளிக்கிழமையன்று இரவு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது, சன்சார் சந்த்தை கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சன்சார் சந்த்தின் மனைவி, மூன்று இடைத்தரகர்கள், சன்சார் சந்த்தின் கீழ் பணிபுரியும் மூன்று அதிகாரிகள் உட்பட, 10 பேர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

சன்சார் சந்த், 1986-ம் பேட்சில், இந்திய வருவாய்த் துறையில் பணியமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: