திருவனந்தபுரம்;
கேரள சட்டமன்றத்தில் 2018 க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே இடது ஜனநாயக முன்னணி அரசின் நோக்கமாகும். கேஎஸ்ஆர்டிசி (கேரள அரசு போக்குவரத்து) லாபத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சேவைக்காக புதிய பேருந்துகள் வாங்க அரசு பணம் கொடுக்கும். இதன் அடிப்படையில் ஆயிரம் கோடி ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய பாஜக அரசு விற்றுள்ளது. இந்த கொள்கையை தொடங்கி வைத்தவர் மன்மோகன்சிங். அவர்களது இந்த கொள்கைக்கு மாற்றாக இடது ஜனநாயக முன்னணி அரசின் கொள்கைகள் உள்ளன. பொது சுகாதாரத்திட்டத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

கேரளத்தில் துறைமுகங்களுக்கு ரூ.600 கோடி, மாநில அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி நபார்டு வங்கி வழங்க உள்ளது. மீதமுள்ள தொகை கிப்சி மூலம் பெறப்படும். அதோடு மத்திய அரசின் உதவியும் கிடைக்கும். அது எத்தகையது என்பதை இப்போது தெரிவிக்க முடியாது.கேரள வங்கி துவங்குவதற்கு தேவையான கருத்துருக்கள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் இது குறித்து எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.இவ்வாறு அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: