====கண்ணன் ஜீவா=====
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் இந்தாண்டு 85 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பத்ம விபூஷன் விருதுகள் 3 பேருக்கும், பத்ம பூஷன் விருதுகள் 9 பேருக்கும், பத்மசிறீ விருதுகள் 73 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரத ரத்னா யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.விளையாட்டுத் துறையைப் பொறுத்த வரையில் பங்கஜ் அத்வானி (பில்லியர்ட்ஸ் ), எம்.எஸ்.தோனி ( கிரிக்கெட்) ஆகியோருக்கு பத்மபூஷன் விருதும், சிக்கிம் மீராபாய் சானு (பளு தூக்குதல் ), சோம்தேவ் தேவ் வர்மன் ( டென்னிஸ் ), முரளிகாந்த் பட்நாகர் (பாராலிம்பிக்), கிடாம்பி சிறீகாந்த் ( பேட்மிண்டன் ) ஆகியோருக்கும் பத்ம சிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆறு பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும் முந்தைய ஆண்டுகளில் இத்துறைக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 
5 விழுக்காடு:
1954 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் 4502 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொழில்துறைக்கு அடுத்தபடியாக மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ள துறை விளையாட்டுத் துறைதான்.ஆண்டுதோறும் வழங்கப்படும் மொத்த விருதுகளில் சராசரியாக 5 விழுக்காடுதான் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்படுகிறது. வழங்கப்பட்ட 225 விருதுகளில் 192 பத்மசிறீ, 29 பத்மபூஷன், 3 பத்ம வீபூசன், ஒரு பாரத ரத்னா விருதும் அடங்கும். 
 
கிரிக்கெட்தான் டாப்:
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று பொதுவான குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்பதை நிருபிக்கும் வகையில் விளையாட்டு என்றாலும் விருது என்றாலும் இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தாண்டு மட்டுமல்ல கடந்த காலங்களிலும் வழங்கப்பட்ட பத்ம விருதுகளை ஒப்பிட்டுப்பார்த்தால் இது புலப்படும். 225 விருதுகளில் 25 விழுக்காடு , அதாவது 55 விருதுகள் கிரிக்கெட் வீரர்களுக்கு தரப்பட்டுள்ளன.இதில் 42 பத்ம ஸ்ரீயும், 11 பத்ம பூஷனும், தலா ஒரு பத்ம விபூஷன், பராத ரத்னாவும் அடங்கும். அதற்கு அடுத்தப்படியாக மலையேற்ற வீரர்களுக்கு 34 ம், ஹாக்கிக்கு 25 ம், தடகளத்திற்கு 23 ம், டென்னிசுக்கு 11 ம், பேட்மிண்டனுக்கு 10 ம், மல்யுத்ததிற்கு 9 ம், செஸ், குத்துத்சண்டை, பில்லியர்ட்ஸ் உள்ளிட்டவைக்கு தலா 6 ம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட விளையாட்டிற்கு தலா 5 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதிக விருதுகள்:
அதிக விருதுகள் பெற்றவர்களின் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். சர்வதேச அளவில் இந்திய விளையாட்டுத்துறைக்கு பெயர் பெற்றுக்கொடுத்தவர்கள் இவர்கள் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அந்த விருதுக்கு இவர்கள் பொருத்தமானவர்களே.இவர்கள் இவரும் தலா மூன்று விருதுகளை பெற்றுள்ளனர். அதிக விருது பெற்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் 34 விருதுகள் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த படியாக டெல்லி ( 28), மேற்கு வங்காளம் ( 20 ), கர்நாடகா (19), பஞ்சாப் (19), தமிழ்நாடு (15), அரியானா ( 14), தெலுங்கானா ( 13), உத்தரப்பிரேதசம் ( 12 ) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 
புறக்கணிப்பு:
64 ஆண்டு கால பத்ம விருதுகள் வரலாற்றில் 9 ஆண்டுகள் விளையாட்டுத் துறைக்கு ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகள் ஒரே ஒரு விருது மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மட்டும் 3 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தவிர்த்து 63 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பத்ம விபூசன் விருதுகள் வழங்கப்படவில்லை. சர்வதேச போட்டிகளின் போது இந்திய வீரர்கள் அல்லது இந்திய அணி தோல்வியைத் தழுவும் போதும் அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு காரணம் குற்றச்சாட்டுகள் எழும்பும். இத்தனை தடைகளையும் மீறி சாதனைபடைக்கும் வீரர் அல்லது வீராங்கனைகளுக்கு அரசு வழங்கும் உயரிய விருதுகளைத்தான் அவர்கள் அங்கீகாரமாக கருதுவார்கள். அதிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதனைபடைக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரொக்கப்பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டாலும் நாட்டில் வழங்கப்படும் உயரிய விருதுகள் தான் அவர்கள் புரிந்த சாதனைக்கான மணிமகுடமாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே அத்தகைய பெருமை மிக்க விருதுகளை பெறபோதுமான விளையாட்டு வீரர்கள் நாட்டில் இல்லையா? அல்லது விளையாட்டு துறைக்கு இதுபோதும் என்று மத்திய அரசு நினைக்கிறதா?
பிரிவுகள்                                           விருதுகள்
லை                                                     973
இலக்கியம்,கல்வி                              893
மருத்துவம்                                          552
அறிவியல்                                           501
சமூக சேவை                                      436
சிவல் சர்வீஸ்                                     421
பொது                                                    236
விளையாட்டு                                      225
வர்ததகம் மற்றும் தொழில்            184
மற்றவை                                               81
மொத்தம்                                             4052

Leave a Reply

You must be logged in to post a comment.