புதுதில்லி;
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், அலங்கார அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட்டாக இது இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
மாறாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிசாமியோ, நடுநிலையுடன் கூடிய வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் என்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 49-ஆவது நினைவு நாளையொட்டி, தில்லியிலுள்ள தமிழ்நாடு ‘வைகை’ இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி எங்களுக்கு வரவில்லை; தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலம் ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு வரவேண்டிய நிதியும் இன்னும் வரவில்லை; ஜிஎஸ்டி-யால் தமிழகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது; அதற்கான இழப்பீட்டுத் தொகையும் தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை” என்று அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேலும், ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களைத்தான் காலம் கடந்து மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது என்று கூறிய தம்பிதுரை, ‘ஒரே இந்தியா’ என்ற கருத்தியலை அதிமுக எதிர்ப்பதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இடையூறு ஏற்படாத வண்ணம் மத்திய அரசு செயல்பட வேண்டும் எனவும் எல்லா அதிகாரங்களையும் மத்தியில் குவித்து கொள்வது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: