மன்னார்குடி;
கணவன்,மனைவி, 40 நாட்களே ஆன குழந்தை எனஞுமூவரையும் மிகக்கொடூரமாக சாதி ஆணவப் படுகொலை செய்த சாதி ஆதிக்கச் சக்தியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு தஞ்சை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தலா மூன்று ஆயுள் தண்டனைகளை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பை வரவேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சின்னை. பாண்டியன் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் கீழமருதூரைச் சேர்ந்த கணேசன்-ரோஜினாவதி மகள் அமிர்தவள்ளி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் செவிலியர் கல்வி பயின்ற உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி பெண். இவரும் அந்த ஊரைச்சேர்ந்த பழனியப்பன் என்பவரும் காதலித்து வெளியூர் சென்று திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு 40 நாட்களே ஆன அபிலேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. சாதி ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த பழனியப்பன் சகோதரர் சிவசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அமிர்தவள்ளி, பழனியப்பன் இருவரையும் ஊரக்கு வழவழைத்து கொலை செய்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தொடர்ந்து அவர்களோடு தொலைபேசியில் சகஜமாக பேசுவதுபோல் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
குழந்தை பிறந்ததற்கு பிறகு அவர்கள் பேச்சை நம்பி அமிர்தவள்ளியும், பழனியப்பனும் ஊருக்கு வந்துள்ளனர். கடைசி பேருந்து வந்தவுடன் பழனியப்பன் சகோதரர் சிவசுப்பிரமணியனின் நண்பர் துரைராஜ், அவர்கள் இருவரையும் அழைத்துச்செல்வதற்காக வந்தவர், முன்னே செல்கிறேன்; நீங்கள் வாருங்கள் என்று சொல்லிவிட்டு முன்னே சென்றார். அவ்வாறு பழனியப்பன், அமிர்தவள்ளி குழந்தையுடன் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சிவசுப்பிரமணியன் அவரது சகோதரர்கள் துரைராஜ் உள்ளிட்ட பலர் திரண்டு வந்து பழனியப்பன், அமிர்தவள்ளி, குழந்தை அபிலேஷ் மூவரையும் மிகக்கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இக்கொலைகளின் உச்சக் கொடூரம் என்னவென்றால் உடல்களை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அமிர்தவள்ளியின் உடலை குன்னியூர் அரிச்சந்திரா ஆற்றில் போட்டுள்ளனர். பழனியப்பன் உடலை போர்வெல் அருகில் உள்ள சேற்றில் மூழ்கடித்தும் குழந்தையை கொலை செய்து ஒரு பாலிதீன் கவரில் வைத்து குன்னியூர் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் வீசிச்சென்றுள்ளனர்.
சேற்றில் புதைந்து கிடந்த பழனியப்பன் உடலை ஊர் மக்கள் பார்த்த பிறகு ஞுகுற்றவாளி சிவசுப்பிரமணியன் ,எனது தம்பி பழனியப்பனை அமிர்தவள்ளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொலை செய்து விட்டார்கள் என அப்படியே மாற்றி காவல் துறையில் புகார் செய்துள்ளார். கோட்டூர் காவல் துறையினர் இரண்டு குடும்பத்தாரையும் அமிர்தவள்ளியின் பெற்றோர், சகோதரர் ஜோதிபாசு ஆகியோரை காவல் நிலையத்தில் விசாரித்தபோதுதான் அமிர்தவள்ளியின் சடலம் ஆற்றில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
காவல்துரையினர் சந்தேகங்கொண்டு சிவசுப்பிரமணியன், துரைராஜ் ஆகியோரை தீவிரமாக விசாரித்தபோதுதான் குழந்தையின் உடலை போட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. பழனியப்பன், அமிர்தவள்ளி, குழந்தை அபிலேஷ் ஆகிய மூவரையும் கொடூரமாக கொலை செய்தது சிவசுப்பிரமணியன், துரைராஜ் வகையறாதான் என்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இந்த வழக்கில் கோட்டூர் காவல் துறையினர் மிகச்சரியாக புலனாய்வு செய்து, குற்றவாளிகள் சிவசுப்பிரமணியன், துரைராஜ் வகையறாவை கைது செய்து தடயங்களை கைப்பற்றி விசாரணை செய்து உரிய சட்டப்பிரிவுகளில் வழக்கை தொடுத்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட அமிர்தவள்ளி, பழனியப்பன் குடும்பத்தாருக்கு ஆதரவாக உதவிட யாருமே கிராமத்தில் இல்லாத அளவிற்கு சாதி ஆதிக்கச் சக்தியினரின் அச்சுறுத்தல் இருந்தது. இந்நிலையில் கோட்டூர் காவல்துறையினர் சரியாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கு குடியுரிமை மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்கியுள்ளது.
குற்றவாளி சிவசுப்பிரமணியனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் இதரவு பிரிவுகளின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம், குற்றவாளிகள் ராமகிருஷ்ணன், துரைராஜூக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம், குற்றவாளி மகேந்திரனுக்கு தடயங்களை மறைத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
கற்பனைக்கெட்டாத கொடூரமான இக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த இத்தண்டனை தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழுவும் வரவேற்கிறது. அதே சமயத்தில் இந்த தண்டனைகள் பிரிவு -302 உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் குற்றச்சாட்டுக்களிலிருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்கவில்லை.
வருங்காலத்தில் பாதிக்கப்பட்ட அமிர்தவள்ளி குடும்பத்தாருக்கு பாதுகாப்பை மாவட்ட காவல் துறையினர் அளிக்க வேண்டும், ஆதரவற்ற வயதான அமிர்தவள்ளியின் பெற்றோருக்கு வாழ்வாதார அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிபாசுவிற்கு அரசு வேலை அளிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி ஆணவ கொலைகளை எதிர்காலத்தில் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அமிர்தவள்ளியின் குடும்பத்தாரை தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகிய நானும் மாவட்ட செயலாளர் பி. கந்தசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி கோட்டூர் ஒன்றிய செயலாளர் எல். சண்முகவேலு உள்ளிட்டோர் சந்தித்தோம்.
இவ்வாறு சின்னை.பாண்டியன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.