சண்டிகர்,

அரியானாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியானாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் இருவர் அங்குள்ள மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காக சென்றனர். வழிபாடு முடித்து விட்டு அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாணவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை அரியானா காவலர்கள் கைது செய்துள்ளனர். இது குறித்து மகேந்திரகர் மாவட்ட ஆணையாளர் கரிமா மிட்டல் கூறுகையில், காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃதி தனது டிவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மிகவும் மன வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரியானா அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.