புதுதில்லி:
மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்து இருப்பது போல் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆவதற்கான சாத்தியமில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.தவறான புள்ளிவிவரங்களைத் தருவதாக பட்ஜெட் இருப்பதாகவும் அவர் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக மன்மோகன் சிங் மேலும் கூறியிருப்பதாவது:
2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால், இது எந்த வகையில் சாத்தியமாகும் என்பது எனக்குத் தெரியவில்லை.
நாட்டின் வேளாண் பொருளாதார வளர்ச்சி 12 சதவிகிதம் அடையாதவரை இந்த இலக்கை நாம் அடையவே முடியாது. விவசாயிகளின் வருமானமும் இரண்டு மடங்காக உயராது. மத்திய அரசின் வாக்குறுதி என்பது ஒரு நிழல்வாக்குறுதி, அது மாயை.
நாட்டின் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது.தேர்தலில் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாக இதை நான் நினைக்கவில்லை. ஆனால், என்னுடைய கவலை எல்லாம், நிதி தொடர்பாக அளித்த புள்ளிவிவரங்கள் தவறாக இருக்கின்றன என்பதுதான்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.