புதுதில்லி:
மத்திய அரசின் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மாதச் சம்பளதாரர்களின் ஆண்டு வருமானத்தில் ரூ. 40 ஆயிரம் வரை நிலையான கழிவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2006-07 நிதியாண்டில் நீக்கப்பட்ட இந்த ‘நிலையான கழிவு’ திட்டம் மீண்டும் கொண்டுவரப்படுவதாகவும், அப்போதிருந்த நிலையான கழிவு ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், இது மாதச் சம்பளக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் சலுகை என்றும் ஜெட்லி கூறினார்.
ஆண்டொன்றுக்கு ஒருவர் மொத்த வருமானமாக ரூ. 5 லட்சத்து 34 ஆயிரத்து 200 ஈட்டுகிறார் என்றால், அதில் நிலையான கழிவுத் தொகையான (Standard Deduction) ரூ. 40 ஆயிரத்தை கழித்துக் கொண்டு, 4 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் வருமான வரி செலுத்தினால் போதும் என்பதுதான் ஜெட்லி அறிவிப்பில் உள்ள அம்சம்.
ஆனால், ‘நிலையான கழிவு’ என்று அறிவித்து விட்டு, அதற்குப் பதிலாக, நடப்பு ஆண்டு வரையிலும், மாதச் சம்பளக்காரர்கள் சலுகையாக அனுபவித்து வந்த வருடாந்திர போக்குவரத்து சலுகையான 19 ஆயிரத்து 200 ரூபாயையும், மருத்துவச் சலுகையாக அனுமதிக்கப்பட்ட 15 ஆயிரம் ரூபாயையும் ( மொத்தம் 34 ஆயிரத்து 200 ரூபாய்) மோடி அரசு பறித்துக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.அதாவது, மோடி அரசு அறிவித்த ரூ. 40 ஆயிரம் நிலையான கழிவில், உண்மையில் கிடைப்பது, வெறும் ரூ. 5 ஆயிரத்து 800 மட்டும்தான் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
வருமான வரி மீதான செஸ் வரி 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், 40 ஆயிரம் நிலையான கழிவால், வருமான வரியிலிருந்தும் பெரிய சலுகை இல்லை கிடைக்கவில்லை.
ஏனெனில் கடந்தாண்டு ரூ. 5 லட்சம் வருமானம் ஈட்டிய ஒருவர் 3 சதவிகித செஸ் வரியாக 375 ரூபாயை ஒருவர் செலுத்தினார். வருமான வரியுடன் சேர்த்து 12 ஆயிரத்து 875 ரூபாயாக அது இருந்தது. அது தற்போதைய 4 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் வருவாய்க்கு 4 சதவிகித செஸ் வரி 488 ரூபாயுடன் சேர்த்து 12 ஆயிரத்து 698 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. அதாவது 40 ஆயிரம் ரூபாய் நிலையான கழிவு அளிக்கப்பட்டும் மிஞ்சுவது என்னவோ, வெறும் 177 ரூபாய்தான் என்றாகி இருக்கிறது.
மோடி அரசின் இந்த தில்லாலங்கடி வேலையை தாமதமாகவே உணர்ந்த மாதச் சம்பளதாரர்கள், மோடி அரசாவது, மக்களை வாழ வைப்பதாவது? என்று புலம்பித் தவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.