டர்பன்:
இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்,6 ஒருநாள் மற்றும் 3 டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 6 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.கேப்டன் டு பிளசிஸ்(120) சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற துரத்தக் கூடிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தாலும், கேப்டன் கோலியின் சதத்தின் உதவியாலும் இந்திய அணி 45.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கோலி 112 (119 பந்து) ரன்களும், ரகானே 79 (86 பந்து) ரன்னும் எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த வெற்றி மூலம் 6 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “சொந்த மண்ணில் அசுர பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தை, ஒருநாள் போட்டியிலும் தொடர விரும்பினோம்.பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணியை 269 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியதே இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.ரகானே எந்தவித பதட்டம் இல்லமால் வேகப்பந்தை சர்வசாதரணமாக எதிர்கொண்டார் அவருக்கு எனது பாராட்டுக்கள்.ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் முதல் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு கோலி கூறினார்.
தென்னாப்பிரிக்கா கேப்டன் டு பிளசிஸ் கூறுகையில்,“எங்கள் அணி 50 முதல் 70 ரன்கள் வரை குறைவாக அடித்துவிட்டதாக நான் எண்ணுகிறேன்.எங்கள் அணி பேட்டிங் செய்த விதத்தில் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.கிறிஸ் மோரிஸ் பேட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.வெற்றி பெற அனைத்து வாய்ப்புகள் இருந்தும் கோலி மற்றும் ரகானே ஆகியோர் அந்த வாய்ப்பை பறித்து விட்டனர்” என்றார்.

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 4-ஆம் தேதி(ஞாயிறு) சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியனில் மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.