மதுரை:
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மருத்துவக்கல்வி இயக்குநராக டாக்டர் எட்வின்ஜோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். பணிமூப்பு அடிப்படையில் தனக்குதான் மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவக்கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

ஆனால், இவ்விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவில், மருத்துவக்கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அரசாணையையும், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் அந்த பதவிக்கு தகுதியான நபரை 6 வாரத்தில் பரிசீலித்து நியமிக்குமாறும் கூறியது.
தமிழக அரசு இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றவில்லை. மாறாக, அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவித்தது. இதைச் சுட்டிக்காட்டி, டாக்டர் ரேவதி கயிலைராஜன் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடவே, ஜனவரி 31-ஆம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு ஆஜரான அரசு வழக்கறிஞர், மருத்துவக்கல்வி இயக்குநர் பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இவ்விவகாரத்தில் முடிவெடுக்க 2 நாட்கள் அவகாசமும் கோரினார்.

அதனடிப்படையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ-வே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். எதன் அடிப்படையில் எட்வின் ஜோ நியமிக்கப்பட்டார், என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு, அனுபவ அடிப்படையில் எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: