கோவையில் உள்ள இந்திய அரசு அச்சகத்தை மூடும் மத்திய அரசின் முடிவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை – தென்னகத்தில் இயங்கும் ஒரே அச்சகத்தை ஏன் மூடவேண்டும் என நீதிமன்றம் கேள்வி – அச்சக தொழிலாளர்கள் மகிழ்ச்சி.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பிரஸ் காலனி பகுதியில் இயங்கிவரும் மத்திய அரசு அச்சகத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இத்தீர்ப்பு இங்கு பணியாற்றி வரும் அச்சக தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் மொத்தமுள்ள 17 மத்திய அரசு அச்சகங்களை ஐந்தாக குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி மூடப்படும் பன்னிரண்டு அச்சகங்கள் பட்டியலில் கோவையில் செயல்பட்டு வரும் அச்சகமும் இடம்பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சக தொழிலாளர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் முயற்சியால் கோவைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அச்சகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பில் கடையடைப்பு, முற்றுகை போராட்டம் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு “தமிழகத்தில் இயங்கும் இந்த ஒரே மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது, தென்னகத்தில் இயங்கும் இந்த ஒரேவொரு அச்சகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி கடிதம் எழுதினார்.

எனினும், கோவை அரசு அச்சகத்தை மூடும் முடிவில் மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் உறுதியாக இருந்தது. கோவை அச்சகத்தை மூடி நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்கும் வகையில் மத்திய அரசு “ஸ்டாப் பிரஸ்” உத்திரவு பிறப்பித்ததோடு இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அச்சகத்திற்கு பணிமாற்றம் செய்து உத்திரவிடப்பட்டது. இதனை எதிர்த்து அச்சக தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று [பிப்-1] தொழிலாளர்கள் மற்றும் மத்திய அரசு என இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் “தென்னிந்தியாவில் இயங்கி வரும் இந்த ஒரே அச்சகத்தை ஏன் மூட வேண்டும், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கோவை அச்சகத்தை மேம்படுத்தி இயக்கலாமே” என கேள்வி எழுப்பியதோடு, கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் கோவை அச்சகத்தில் பணியாற்றி வரும் அச்சக தொழிலாளர்களை இடம் மாற்றம் செய்யவும் தடை உத்திரவு பிறப்பித்தது. நான்கு வார காலத்திற்கு விசாரணையினையும் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று மாலை பிறப்பிக்கபட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்திரவு நகலை சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வந்த தொழிற்சங்கத்தினர் இன்று அச்சக தொழிலார்களிடம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தரப்பு நியாயத்தை உயர்நீதிமன்றம் புரிந்து கொண்டு நீதி வழங்கியுள்ளதாகவும் இந்த இடைக்கால தீர்ப்பு வரும் காலத்தில் இந்த அச்சகம் மூடப்படாது என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: