மத்திய நிதியமைச்சர், கார்ப்பரேட்டுகளின் வணிகத்தை எளிமைப்படுத்துகிறேன் என்ற
பெயரில் கார்ப்பரேட்டுகளும், சலுகைசார் முதலாளித்துவமும் நாட்டின் செல்வங்களைச் சூறை
யாட தமது பட்ஜெட்டில் வசதி செய்து கொடுத்துள்ளார். அதேசமயத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினரை கண்ணைக்கட்டி ஏமாற்றியுள்ளார். விவசாய விளைப் பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கோரியும்,
கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும் நாடு முழுவதும் விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்திவந்தன. ஆனால் அவை தொடர்பாக பட்ஜெட்டில் எதுவுமே சொல்லப்படவில்லை.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரைபங்கு சேர்த்து கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகளுக்கு உறுதி
மொழி அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அதனை நாடு முழுவதும் அமல்படுத்த முன்வரவில்லை. மேலும் விவசாய விளைப் பொருள்களுக்கு அளித்துள்ள விலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தவறான தகவல்களைத் தாக்கல் செய்துள்ளார்.

விவசாயப் பொருள்கள் எதற்கும் உற்பத்திச் செலவினத்தில் ஒன்றரை பங்கு உயர்த்தி கட்டுப்படியாகும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
மேலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்தும் இந்த அரசு எதுவும் அறிவித்திடாமல் துரோகம் செய்திருக்கிறது  வேளாண் கடன் பத்து சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளபோதிலும் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு எதுவும் கிடையாது. இவை வங்கிகளில் கடன்கள் வாங்குவதன் மூலமே மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால்
விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை.

மேலும் விவசாயத்துறையில் விவசாயிகளின் பெயரால் யார் கோடிக்கணக்கான ரூபாய்கள் கடன்கள் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தோமானால், சிறிய மற்றும்
நடுத்தர விவசாயிகளுக்கு 41 சதவீதம் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய்க்கும் கீழேதான் கடன் தரப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகளும் அவர்களின் நிறுவனங்களுமே (சுமார் 14 சதவீதம்) கோடிக்கணக்கில் கடன் பெற்றிருப்பதைக் காண முடியும்.

அடுத்ததாக விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. 2016-17இல் 15 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தவர்களுக்கும் இன்னமும் கூலி கிடைக்கவில்லை. எட்டு மாநில அரசுகளுக்கு சென்ற ஆண்டுக்கான நிலுவைத்தொகையே மத்திய அரசு 1,555 கோடிரூபாய் அளித்திட வேண்டும். இவ்வாறு இத்திட்டத்திற்கு மிகவும் அற்பத்தொகையை மத்திய அரசு ஒதுக்கிவருவதால் மாநில அரசுகள் பல்வேறு விதங்களிலும் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

இதுகுறித்தெல்லாம் மோடி அரசின் பட்ஜெட் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் கோரிக்கை கள் குறித்து சொரணையற்று இருக்கின்ற மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுமாறு அனைத்துக் கிளைகளையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது.

விவசாயிகள் சங்க தலைவர்கள் அசோக் தாவ்லே,ஹன்னன் முல்லா, விவசாயத் தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசு, ஏ.விஜயராகவன்
ஆகியோரது அறிக்கையிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: