சண்டிகர்:
சண்டிகரில் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமதமாக வந்ததால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் வெகுநேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.ஆர். எனப்படும் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், காலையிலிருந்தே மாற்றுத்திறனாளி குழந்தைகள் சாப்பிடாமல் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்காக காக்க வைக்கப்பட்டனர். சுமார் மூன்று மணிநேரம் வெயிலில் அக்குழந்தைகள் காக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், குறிப்பிட்ட நேரத்திலிருந்து அரை மணிநேரம் தாமதமாகவே அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.இது விழாவில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.இகுறித்து, அங்கிருந்த 2 வயது குழந்தையின் தாய் அனிதா குமாரி என்பவர், காலை 9 மணிக்கே அழைத்துவரப்பட்டு விட்ட நிலையில், தன் மகளுக்கு பசி ஏற்பட்டதாகவும், ஆனால், 11.30 மணிவரை அமைச்சர் வரவில்லை என்றும் கூறியுள்ளார். இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறியிருந்தால், நான் என் மகளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வந்திருப்பேன் என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply