திருப்பூர், பிப்.1-
விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் உள்பட மின்கம்பிப் பாதை அமைக்கும் பணி தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த குழு பேச்சுவார்த்தை நடத்தும் வரை மின் பாதை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு விவசாய அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் கெருடமுத்தூரில் வியாழக்கிழமை பிஏபி பாசன சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பல்வேறு விவசாயஅமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மின்பாதை அமைப்பினால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளான பொங்கலூர் கோபால், எம்.ராஜாமணி, சோமசுந்தரம், வாவிபாளையம் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ஈசன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பெருமாள், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், நிர்வாகி எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் உள்பட 15 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்அழுத்த மின்தடங்களை, மின்கோபுரங்கள் வழியாகக் கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளிடம் முறையான கலந்தாலோசனை செய்யாமலும், தன்னிச்சையாகவும் இப்பணிகள் மேற்கொள்ளப்
படுவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விவசாய விளைநிலங்களில் மின்பாதை அமைக்கப்பட்டால் விவசாயப் பணிகள் பாதிப்பதுடன், அந்த நிலத்தை விவசாயிகள் வேறு வகையிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அவர்களுக்கு மின் திட்டங்களை நிறைவேற்றும் நிறுவனங்களின் லாபத்தில் பங்கு அல்லது வாடகை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் இதுவரை அரசுத் தரப்பில் உரிய முறையில் தலையிட்டு இப்பிரச்சனையில் விவசாயிகள் பாதிப்பைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே தமிழக அரசு மின்பாதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உடனடியாக தனி குழு அமைக்க வேண்டும். அந்த குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை மின்பாதைப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.