திருப்பூர், பிப்.1 –
தமிழ் மொழியை உலக அளவில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழ் வளர் மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபாக.பாண்டியராஜன் கூறினார்.திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் – பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா திருப்பூரில் உள்ள காங்கயம் சாலை பத்மினி கார்டனில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக புதன்கிழமை ஏழாம் நாள் நிகழ்வாக திருப்பூர் தமிழ்ச் சங்க வெள்ளிவிழா ஆண்டு மற்றும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா நடந்தது. திருப்பூர் தமிழ் சங்கத் தலைவர் ஆ.முருகநாதன் தலைமையில், மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் பேசுகையில், யுனெஸ்கோ அமைப்பு சென்னை நகரத்தை இசை நகரமாக அங்கீகாரம் தந்துள்ளார்கள். 28 நாட்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடக்கும் இடம் சென்னைதான். இசை மரபாக ஊற்றெடுக்கும் நகரமாக சென்னை உள்ளது. தமிழகம் என்று அண்ணா அறிவித்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டு
மொழி, கலை, பண்பாடு ஆகிய மூன்றும் உன்னத நிலையை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் தனித்தன்மையை நாம் மீட்டெடுப்போம். இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்றுவோம். ஒரு குடையின் கீழ் உலகத்தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பழந்தமிழர் பண்பாட்டு கண்காட்சியை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இன்றைக்கு உலகம் முழுவதும் ஒன்பதரை கோடி பேர் தமிழர்கள் உள்ளோம். சீனாவை சேர்ந்த மாண்டரின் மொழியும், தமிழ் மொழியும் அதிகம் பேர் பேசுகிறார்கள். தந்தை பெரியார் தமிழை எளிமைப்படுத்தினார். அதேபோல் தமிழை அடுத்த தலைமுறைக்கு தமிழ் வளர் மையம் மூலம் எடுத்து செல்ல உள்ளோம். தமிழர்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல் உள்ள 17 நாடுகளில் தமிழ் கற்றுத்தர ஆசிரியர்கள் நியமிக்கப் போகிறோம். இணையம் மூலமாக அடிப்படையான கற்றலை ஏற்படுத்த இருக்கிறோம். இதனை தமிழ் வளர் மையம் செய்யும். முதல்கட்டமாக இந்தியாவில் அதனை 5 மாநிலங்களில் கொண்டு செல்ல உள்ளோம். காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ் சொல்லித்தர உள்ளோம். இது போன்ற பிறமாநிலங்களும் தமிழ் சொல்லித்தர புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளோம். ஒவ்வொரு மாதமும் இளமை குன்றாமல் தமிழ் இருக்க, பல்வேறு துறைகளில் உள்ள சொற்களையும் தமிழ்ப்படுத்தி வருகிறோம். தற்போது ஸ்மார்ட் கார்டு என்று தான் பயன்படுத்துகிறோம். இது போன்ற சொற்களை தமிழ்ப்படுத்தும் பணி அனைத்துதுறைகளிலும் நடைபெறும்.

தமிழகத்தில் 36 அருங்காட்சியகங்கள் உள்ளன. விலைமதிப்பற்ற தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் மாநிலமும் தமிழகமும் தான். கிடைப்பதை எல்லாம் கொண்டு 36 அருங்காட்சியகங்களை உலகத் தரத்தில் மாற்றுவோம். திருப்பூர் உட்பட அருங்காட்சியகம் இல்லாத மாவட்டங்களில் அடுத்த ஓராண்டுக்குள் அருங்காட்சியகம் அமைப்போம். நடப்பாண்டில் தமிழகம் என்று அறிவித்ததுக்கான பொன்விழா ஆண்டு என்று சொல்லாமல் தமிழரின் பொன்விழாவாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் அ.லோகநாதன், பொருளாளர் கு.முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.