கோவை, பிப்.1-
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணை முடிய இன்னும் ஒராண்டு ஆகுமென விசராணை அதிகாரி கோவையில் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்தாண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டன. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் 3வது கட்ட புதனன்று விசாரணையை துவக்கிய நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக 1951 பேர் பிரமாண வாக்கு மூலம் அளித்துள்ளனர். மதுரையில் 960, சென்னையில் 888, கோவையில் 50, சேலத்தில் 11, திருச்சியில் 6 பேர் என வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவையில் தற்போது 3வது முறையாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 பேர் ஆஜராகவில்லை. பின்னர், நவம்பர் 28, 29 தேதிகளில் நடத்தப்பட்ட விசாரணையில் 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் 8 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. தற்போது 3வது கட்ட விசாரணையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். இதில் முதல் நாள் விசாரணைக்கு 6 பேர் ஆஜராகியுள்ளனர். மதுரையில் 960 பேருக்கு 47 பேரிடமும், சென்னையில் 888 பேருக்கு 132 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மார்ச் மாதம் முதல் வாரம் மற்றும் கடைசி வாரங்களில் 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளோம். கோவையில் இதுதான் இறுதி கட்ட விசாரணை. இங்கு ஆஜராகதவர்கள், சென்னைக்கு அழைக்கப்படுவார்கள். கோவையை பொறுத்தவரை காவல்துறை ஆதரவாளர்கள் 21 பேர், காவல் துறையினர் 7 பேர், பொதுமக்கள் 14 பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதில் கோவை மாநகர முன்னாள் காவல் துறை ஆணையர் அமல்ராஜ், 2 காவல் துறை உதவி ஆணையர், ஒரு துணை ஆணையரும் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.

கோவை, மதுரை, சென்னையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நபரிடம் விசாரணை நடத்த 2 மணி நேரத்திற்கும் மேலாகிறது. இது தவிர வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வதால், காலதாமதம் தவிர்க்க முடியததாகிறது. இருப்பினும் ஓராண்டுக்குள் இந்த விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.காவல் ஆணையர் ஆஜர் இதற்கிடையே, வியாழனன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற விசாரணையில், கோவை மாநகர முன்னாள் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: