ஈரோடு, பிப்.1-
ஈரோட்டில் புதிய திட்டங்களை துவக்கி வைக்க வந்த சட்டமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அப்பகுதியில் இருந்த 256 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. தற்போது அங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ள நிலையில் பலர் வீடின்றி தவித்து வருகின்றனர். இதனால் சிலர் சாலையில் படுத்து உறங்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதநிலை இருந்து வருகிறது. எனவே, புதியதாக உருவாகியுள்ள 65 குடும்பங்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தண்ணீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதேபோல், அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 1 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டு வீடில்லா மக்களுக்கு வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வியாழனன்று அப்பகுதியில் நடைபெற்ற அரசு விழாவிற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு மற்றும் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது, அம்பேத்கர் நகர் பொதுமக்கள் தீடீரென சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டனர். இதன்பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.