ஈரோடு, பிப்.1-
கருங்கல்பாளையத்தில் வியாழனன்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 90 சதவிகித மாடுகள் விற்பனையாகின.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் புதன்கிழமை அடி மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இச்சந்தைக்கு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளைக் கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் மாடுகள் தரமானதாக உள்ள காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்ய தமிழக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளும் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், வியாழனன்று (பிப்.1) நடைபெற்ற சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதேபோல், அனைத்து மாநில வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் சந்தையில் மாடுகள் விற்பனை வழக்கமான நிலைக்குத் திரும்பிய நிலையில், 90 சதவிகித மாடுகள் விற்பனையானது.இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியது:- கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த ஒரு மாதமாக வராமல் இருந்த மகாராஷ்டிரா வியாபாரிகள் இந்த வாரம் வந்திருந்தனர். அத்துடன் பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல் சந்தைக்கு வந்திருந்தனர். இதன் காரணமாக, சுமார் 90 சதவிதம் மாடுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த வாரச் சந்தையில் 350 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ.1000 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.